கடுமையான மனநலப் பிரச்சினைகளைக் கையாளும் சேவைகள் சிங்கப்பூரின் எல்லா சுகாதாரப் பராமரிப்புப் பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன் தெரிவித்துள்ளார்.
வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அவசரத் தேவையுள்ள அதிகமான நோயாளிகள் எளிதாகச் சேவைகளைப் பெறவும் அவ்வாறு செய்யப்பட இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் எஸ்போ அரங்கில் புதன்கிழமை (ஜூலை 16) நடைபெற்ற சிங்கப்பூர் மனநல மாநாட்டில் பங்கேற்றுப் பேசுகையில் டாக்டர் கோ இத்தகவலை வெளியிட்டார்.
தீவிர மனநலப் பிரச்சினை உள்ளோருக்கான சேவைகள், உள்நோயாளிப் பிரிவு, புறநோயாளிப் பிரிவு என இருவகைகளில் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது, சிங்கப்பூரில் உள்ள 11 பொது மருத்துவமனைகளில் ஆறில் மனநல உள்நோயாளிப் பராமரிப்பு சேவை நடப்பில் உள்ளது.
மனநலச் சுகாதாரக் கழகம் (IMH), டான் டோக் செங் மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை, சாங்கி பொது மருத்துவமனை, சிங்கப்பூர் பொது மருத்துவமனை, செங்காங் மருத்துவமனை ஆகியன அந்த ஆறு மருத்துவமனைகள்.
அதேபோல, புறநோயாளி மனநலச் சேவைகள் மனநலச் சுகாதாரக் கழகத்திலும் எல்லா தீவிர சிகிச்சை மருத்துவமனைகளிலும் அளிக்கப்படுகின்றன.
மனநலம் பேணுவதற்கான சிங்கப்பூரின் பல அடுக்குப் பராமரிப்பு மாதிரி அடங்கிய நடைமுறை வழிகாட்டிக் கையேடு ஒன்றும் மாநாட்டில் வெளியிடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அந்தக் கையேடு சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் கிடைக்கும்.
மனநலச் சேவைகளை வழங்குவோரின் மருத்துவ மதிப்பீட்டு முறைகளையும் பரிந்துரைப்பு நடைமுறைகளையும் தரப்படுத்துவது அந்தக் கையேட்டின் நோக்கம்.
மனநலப் பாதிப்புக்கான அறிகுறிகளின் தீவிரம் மற்றும் நிலைத்தன்மை, எந்த மாதிரியான பராமரிப்பு தேவைப்படும் ஆகியனவற்றின் அடிப்படையில் சேவைகளைத் தரப்படுத்த கையேடு எண்ணம் கொண்டு உள்ளது.
சுகாதார அமைச்சு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, ஒருங்கிணைந்த பராமரிப்புக்கான அமைப்பு ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள அந்த வழிகாட்டிக் கையேட்டிற்கு பல்வேறு அமைப்புகள் யோசனைகளை வழங்கி உள்ளன.

