சிறார்களை பாலியல் செயலில் ஈடுபட தூண்டுவோருக்கு கடும் தண்டனை: இரு அமைச்சுகள் எச்சரிக்கை

சிறார்களை பாலியல் செயலில் ஈடுபட தூண்டுவோருக்கு கடும் தண்டனை: இரு அமைச்சுகள் எச்சரிக்கை

2 mins read
edb5aba4-2bea-4cd3-842c-bc00370866b2
டெலிகிராம் உரையாடல் தளம் வழியாக சிறார்களை பாலியல் செயலுக்கு ஈர்த்த மூவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். - படம்: லியான்ஹ சாவ்பாவ்

சிறார்களை பாலியல் செயலில் ஈடுபட தூண்டுவோருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் பாயவிருக்கின்றன.

இத்தகைய குற்றத்திற்கு பிரம்படியும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம் இரு அமைச்சுகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.

சிறார்களுடன் பாலியல்ரீதியாக தொடர்புகளை வைத்திருப்பது அல்லது அவர்களை பாலியல் நோக்கத்தில் நேரில் சந்திப்பது உள்ளிட்டவை குற்றமாகக் கருதப்படும்.

டெலிகிராமில் லியோமேட்ச் என்ற பெயரில் ஓர் உரையாடல் தளம் செயல்படுவது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அமைச்சுகளிடம் கேள்வி கேட்டது.

இதற்கு உள்துறை அமைச்சும், தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சும் அறிக்கை வாயிலாகப் பதிலளித்துள்ளன.

“அந்த உரையாடல் தளத்தை இளம் வயதினர் பயன்படுத்துவதை அறிந்திருக்கிறோம். அவர்களை பாலியல்ரீதியில் சிலர் தவறாக வழிநடத்தக் கூடிய அபாயம் இருக்கிறது,” என்று இரு அமைச்சுகளும் குறிப்பிட்டன.

இந்த விவகாரத்தை மிகக் கடுமையாகக் கருதுதுவதாகக் கூறிய அமைச்சுகள், இணையத்தளங்களின் வழியாக தூண்டுவோருக்கு எதிராக பல நடவடிக்கைகள் நடப்பில் இருப்பதை சுட்டிக்காட்டின.

பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் பாலியல்ரீதியாகத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிறார்களுடன் பாலியல்ரீதியாக தொடர்புகொண்ட குற்றத்திற்கு பாதிக்கப்பட்டவரின் வயதைப் பொறுத்து இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

டெலிகிராம் உரையாடல் தளத்தைப் பயன்படுத்தி இளம் வயதினரைக் குறி வைத்து செயல்பட்ட மூவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அது குறித்து கவலை எழுந்தது.

மூவரில் ஒருவர், 25 வயது ஆடவர். சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவர் என்று பொய்க் கூறி தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட இரண்டு இளம் பெண்களை ஈரத்துள்ளார்.

அவருக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பத்து பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

மற்றொரு சம்பவம் 31 வயது ஆடவருடன் தொடர்புடையது. அவர், அந்த உரையாடல் தளத்தில் சந்தித்த 14 வயது சிறுவனை தன்னுடன் பாலியல் உறவு கொள்வதற்காக ஈர்க்க முயற்சி செய்துள்ளார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சோதனையிட்டதில் லியோமேட்ச் உரையாடல் தளம் இன்னமும் டெலிகிராம் பயனீட்டாளர்கள் பயன்படுத்தும் வகையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்