சிங்கப்பூரிலும் தாய்லாந்திலும் யூடிரிப் தளத்தில் மிகப் பெரிய சேவைத் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (அக்டோபர் 19) பிற்பகல் நிலவரப்படி, யூடிரிப் தளத்தின் 23 சேவைகளில் கிட்டத்தட்ட 19 சேவைகளைப் பயன்படுத்துவதில் பயனீட்டாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.
யூடிரிப் செயலியில் பணம் நிரப்புதல், தானியக்க இயந்திரத்திலிருந்து பணம் எடுப்பது, மின்னிலக்கப் பணப்பை ஆகிய சேவைகள் அவற்றுள் அடங்கும்.
செயலிக்குள் செல்வது, பண அட்டைகளின் விவரங்களைப் பார்வையிடுவது, மின்சிம் அட்டைகளைப் பெறுவது ஆகிய சேவைகளை மட்டும் பயனீட்டாளர்கள் பெற முடிந்தது.
தாய்லாந்தில் பிற்பகல் 12.20 மணி நிலவரப்படி 14 சேவைகளில் 11 சேவைகளைப் பயன்படுத்த முடியவில்லை. பணம் நிரப்புதல், பரிவர்த்தனைகள் ஆகியவை அவற்றுள் அடங்கும்.
ஆஸ்திரேலியாவில் யூடிரிப் தளத்தின் கட்டமைப்பு சரிபார்க்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாறாக, மலேசியாவில் அனைத்தும் சரிவர செயல்படுவதாக யூடிரிப் தளம் சுட்டியது.
சேவைத் தடங்கல் எப்போது தொடங்கியது என்பது சரியாகத் தெரியவில்லை என்றபோதும் காலை 10.40 மணியளவில் பயனீட்டாளர் ஒருவர் யூடிரிப்பின் சமூக ஊடகப் பக்கத்தில் அதுகுறித்து கருத்து பதிவிட்டார்.
தமது பரிவர்த்தனை நிறைவேற கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததாக அவர் சொன்னார்.
அதற்குப் பதிலளித்த யூடிரிப், தனது செயலி தற்போது தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்தது.
நிலைமையைச் சரிசெய்ய தனது குழுக்கள் முயன்றுவருவதாகவும் குறிப்பிட்ட அது, பயனீட்டாளர்ககளைப் பொறுமை காக்கும்படி கேட்டுக்கொண்டது.
இவ்வாண்டு பிப்ரவரி 24ஆம் தேதி, யூடிரிப் பயனீட்டாளர்களில் சிலரின் அட்டைவழிப் பரிவர்த்தனைகள் ரத்துசெய்யப்பட்டதாகப் புகார் எழும்பியது.
ஆனால், அந்தத் தொகை அவர்களின் கணக்கிலிருந்து பின்னர் கழிக்கப்பட்டது.
