ஆர்ச்சர்ட் டவர்ஸ் கட்டடம் அமைந்துள்ள பகுதியில் பாலியல் தொடர்பான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தபோதிலும், பாலியல் தொழிலாளர்கள் சிலர் அப்பகுதிக்குத் திரும்பிவிட்டதாகத் தெரிகிறது.
அரைகுறையாக உடை அணிந்திருக்கும் பெண்கள், 20க்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இரவு 9 மணிக்குப் பிறகு அந்தக் கட்டடத்துக்கு வெளியே அவர்கள் சுற்றித் திரிவதாக ஷின் மின் செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை (மே 31) தெரிவித்தது.
இரவு 11 மணியளவில் அந்தக் கட்டடத்துக்குச் சென்ற ஷின் மின் செய்தியாளர், கவர்ச்சியாக உடை அணிந்திருந்த சுமார் 10 பெண்கள் வீதியோரம் நின்றுகொண்டிருந்ததைக் கவனித்தார்.
அவர்களில் பெரும்பாலானோர் வியட்னாமைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. தங்களைப் பார்க்கும் ஆடவர்களை அப்பெண்கள் அணுகுவர்.
பின்னிரவு 2 அல்லது 3 மணி வரை அங்கு சுற்றித் திரியும் அப்பெண்களில் சிலர், குறிப்பாக வெளிநாட்டு ஊழியர்களையும் வெளிநாட்டவர்களையும் குறிவைப்பர்.
ஆர்ச்சர்ட் டவர்ஸ் கட்டடத்தைக் கடந்து ஷின் மின் செய்தியாளர் நடந்துசென்றபோது, அங்கிருந்த பெண்கள் அவரை நோக்கி விரைந்து வந்து அவரது கையைப் பிடித்தனர்.
“நாங்கள் அனைத்து விதமான சேவைகளையும் வழங்குகிறோம். விலை $150 முதல் $250 வரை இருக்கும். எந்தக் கோரிக்கையையும் நாங்கள் நிறைவேற்றுவோம்,” என்று அச்செய்தியாளரிடம் அப்பெண்கள் கூறினர்.
சாலையோரம் சில கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை அச்செய்தியாளர் கண்டார். அருகிலுள்ள ஹோட்டல்களுக்கு அப்பெண்களையும் வாடிக்கையாளர்களையும் அழைத்துச் செல்ல அந்த கார்கள் காத்திருந்தன.
தொடர்புடைய செய்திகள்
பாலியல் தொழிலாளர்களால் பெண் குடியிருப்பாளர்களுக்குத் தலைவலி
வேண்டாத விருந்தாளிகளால் அப்பகுதியில் தொழில் செய்வோருக்கும் ஆர்ச்சர்ட் டவர்ஸ் குடியிருப்புக் கட்டடத்தில் வசிப்போருக்கும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
அக்கட்டடத்தின் நிர்வாகக் குழுத் தலைவரான வூ, அக்கட்டடத்துக்கு வெளியே இருப்பவர்கள் பாலியல் தொழிலாளர்கள் என்பதை உறுதிப்படுத்தினார்.
தங்களுடைய மனைவிகள் அல்லது மகள்களைப் பாலியல் தொழிலாளர்கள் எனத் தவறாகக் கருதி, ஆடவர்கள் அவர்களுக்குத் தொந்தரவு செய்ததாக குடியிருப்பாளர்கள் சிலர் புகார் அளித்துள்ளனர்.

