தற்காப்பு அமைச்சைச் சேர்ந்த தம் முன்னாள் சக ஊழியரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் கழித்து, தம்மைத் தாக்கியவருக்கு எதிரான வழக்கில் மாது ஒருவர் வென்றார்.
தாம் காதலித்த அந்த ஆடவருக்கு எதிராக காவல்துறை கூடுதல் நடவடிக்கை எடுக்காததை அடுத்து, அந்தப் பெண் சட்ட ஆலோசனையை நாடி சிவில் வழக்கு தொடுத்தார்.
2016ல் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து 2021ல் அவர் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.
மே 23 தேதியிட்ட தீர்ப்பின்படி, அந்தப் பெண்ணுக்கு பொதுவான இழப்பீடாக $45,000யும் அத்துடன் வட்டியும் வழங்கப்பட்டது. இதில் வலி, துன்பத்திற்காக $25,000யும் தண்டிக்கும் இழப்பீடாக $20,000யும் அடங்கும்.
வட்டியுடன் கூடிய சிறப்பு இழப்பீடாக $8,697.39யும் அந்த மாதுக்கு வழங்கப்பட்டது. மருத்துவம், அது தொடர்பான செலவுகளுக்காக அவர் கோரிய தொகை அது.
அந்த மாதின் அடையாளத்தைப் பாதுகாக்க உரிமை கோருபவர், பிரதிவாதி இருவரின் பெயர்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிடவில்லை.
உரிமை கோருபவரின்படி, அவரும் அவருடைய முன்னாள் சக ஊழியரும் ஜூன் 2015ல் காதல் உறவில் ஈடுபடத் தொடங்கியதோடு, அவர்கள் பாலியல் ரீதியாக நெருக்கமாகினர்.
தங்கள் உறவு குறித்து அவர்கள் வெளிப்படையாக இருக்கலாம் என்று அந்த ஆடவர் விரும்பினாலும், தங்கள் சக ஊழியர்கள் தங்களை எவ்வாறு கருதுவார்கள் என்பது குறித்து தமக்கு கவலை இருந்ததால் அதை ரகசியமாக வைத்திருக்குமாறு அந்த மாது கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
2015 டிசம்பரில் காதல் உறவை முடித்துக்கொண்டதாக அந்த மாது கூறினார். இருவரும் நண்பர்களாக இருக்க ஒப்புக்கொண்டாலும், ஒருவர்மீது மற்றொருவர் உணர்வுகளைக் கொண்டிருந்ததால் அவர்கள் தொடர்ந்து வெளியிடங்களில் ஒன்றாகப் பழகி வந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தற்காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், “வேலையிடத் தொந்தரவையும் பாலியல் முறைகேட்டையும் தற்காப்பு அமைச்சு சகித்துக்கொள்ளாது. வேலையிடத்தில் தொந்தரவு, பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொள்ளுதல் போன்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரிக்கப்படும். சம்பந்தப்பட்ட வழக்கு குறித்து புகார்தாரர் முறைப்படி குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது தற்காப்பு அமைச்சு உடனடியாக விசாரணையைத் தொடங்கியது.
“எங்கள் விசாரணையிலிருந்து, சில குற்றச்சாட்டுகளின் தீவிரமான தன்மை காரணமாக இந்த விவகாரத்தைக் காவல்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்தோம். அதனைத் தொடர்ந்து புகார்தாரர் காவல்துறையிடம் புகார் அளித்தார். காவல்துறை விசாரணை நடந்த காலகட்டத்தில் தற்காப்பு அமைச்சு புகார்தாரருக்கு ஆதரவுக்கரம் நீட்டியது.
“எமது ஊழியர்கள் அனைவருக்கும் மரியாதையுடைய, பாதுகாப்பான ஒரு பணிச்சூழலை உருவாக்குவதில் தற்காப்பு அமைச்சு உறுதிபூண்டுள்ளது. எங்கள் ஊழியர்கள் நடத்தையிலும் ஒழுக்கத்திலும் ஒழுங்காக இருப்பதை நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும், சட்டத்துக்கும் எங்கள் விதிகளுக்கும் உட்பட்டு அவர்கள் நடக்க வேண்டும் என்பதையும் எதிர்பார்க்கிறோம்,” என்று விவரித்தது.

