தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியல் குற்றங்கள்: சிங்கப்பூரில் பலர் கைது

2 mins read
c92a6481-3a8a-4dbe-be5e-9cea20a6794b
கைதானவர்கள் 23 வயதுக்கும் 61 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சிறார் பாலியல் துன்புறுத்தல் செயல்களைக் கொண்ட காணொளிகளை விநியோகித்தது, பாலியல் தாக்குதல் போன்ற குற்றங்களைப் புரிந்ததாக நம்பப்படும் 21 ஆடவர்கள் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதிக்கும் மார்ச் 28ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் 23லிருந்து 61 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

அவர்களில் 43 வயது ஆடவர் ஒருவர், பல ஆண்டுகளாக இளம்பெண் ஒருவரைப் பாலியல் செயல்களில் ஈடுபட வைத்து அச்செயல்களை நேரலையாக ஒளிபரப்ப அவருக்குப் பணம் தந்ததாக நம்பப்படுகிறது என்று காவல்துறை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

மேலும், 24 வயது ஆடவர் ஒருவர், இளம்பெண் ஒருவருடன் அந்தரங்கப் படங்களைப் பரிமாறிக்கொண்டதாகவும் நம்பப்படுகிறது. அத்தகைய படங்களைத் தன்னுடன் பகிராவிட்டால் அவற்றை வெளியிடப்போவதாக அந்த ஆடவர் அப்பெண்ணை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த இரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

கைதான ஆடவர்கள், சிறார் பாலியல் துன்புறுத்தல் படங்கள், காணொளிகளை எடுத்தது அல்லது விநியோகித்தது, குறைந்த வயதுடையோரைப் பாலியல் ரீதியாகத் தொடர்புகொண்டது உள்ளிட்ட குற்றங்களைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஐந்து வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட எல்லை தாண்டிய முறியடிப்பு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட ஆடவர்கள் பிடிபட்டனர். சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து ஆகியவற்றைச் சேர்ந்த காவல்துறையினர் முறியடிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மொத்தம் 435 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 109 பேர் விசாரணையில் ஒத்துழைத்து வருகின்றனர்.

அவர்களில் 525 பேர் ஆண்கள், 19 பேர் பெண்கள். அனைவரும் 13லிருந்து 68 வயதுக்கு உட்பட்டவர்கள்.

சம்பந்தப்பட்ட ஆறு பகுதிகளில் மொத்தம் 269 முறியடிப்பு நடவடிக்கைகள் நடத்தப்பட்டன. திறன்பேசிகள், கணினிகள், தரவு சேகரிப்பு சாதனங்கள் என 550க்கும் அதிகமான கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட சிறார் பாலியல் துன்புறுத்தல் படங்களும் காணொளிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

குறிப்புச் சொற்கள்