சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி ஒருவர் 15 வயதுச் சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டதன் தொடர்பில் வியாழக்கிழமை (ஜூலை 31) அவருக்கு 30 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் பள்ளியில் இணைப்பாட நடவடிக்கைப் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றியபோது அவர் அச்சிறுமியைச் சந்தித்தார்.
இருவருக்கிடையிலான உறவு பற்றிச் சிறுமியின் நெருங்கிய தோழி ஆசிரியர் ஒருவரிடம் தெரிவித்ததை அடுத்து அந்த அதிகாரி கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் மூன்றை அந்த 33 வயது ஆடவர் ஒப்புக்கொண்டார். தண்டனை விதிக்கும்போது அத்தகைய மேலும் ஏழு குற்றச்சாட்டுகளும் ஆபாசப் படங்கள் வைத்திருந்தது தொடர்பான குற்றச்சாட்டும் கருத்தில் கொள்ளப்பட்டன.
சிறுமியின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு அந்த ஆடவரின் பெயரை வெளியிட அனுமதி இல்லை.
திருமணமான அந்த ஆடவர், இணைப்பாட நடவடிக்கைக்கான தேசியக் குடிமைத் தற்காப்பு மாணவர் படைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அந்த இணைப்பாட நடவடிக்கையை மேற்கொண்ட அச்சிறுமியை 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர் சந்தித்தார்.
அவர்பால் ஈர்க்கப்பட்ட சிறுமி தனது உணர்வுகளை அவரிடம் தெரிவித்தபோது முதலில் நிராகரித்த ஆடவர் காலப்போக்கில் சிறுமியுடன் நெருக்கமாகப் பழகத் தொடங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
2023 டிசம்பரில் ஒருநாள், மனைவி அலுவலகம் சென்றிருந்தபோது சிறுமியைத் தன் வீட்டிற்கு அழைத்து அவர் பாலியல் உறவுகொண்டதாகவும் 2024 ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் 10 சம்பவங்களில் அவர் அத்தகைய தகாத உறவில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.
வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, இணைப்பாடப் பயிற்றுவிப்பாளர் என்ற முறையில் அந்த ஆடவர் சிறுமியை வழிநடத்தவேண்டிய நம்பிக்கைக்குரிய பொறுப்பில் இருந்ததைச் சுட்டினார்.

