மின்சாரம் துண்டிக்கப்பட்டு, கைப்பேசிச் சேவைகள் தடைபட்டு, இணையம் முற்றிலுமாக முடங்கிப்போகும் ஓர் இரவு. செயலிகளைப் பயன்படுத்த முடியாத சூழல். நம்பகமான செய்தித் தளங்கள் இல்லாததால், சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் வேகமாகப் பரவத் தொடங்குகின்றன.
‘இத்தகைய இடையூறுகளை எதிர்கொள்ள நீங்கள் தயாரா?’ இந்தக் கேள்வியையே சிங்கப்பூரர்கள் 2026 ‘எஸ்ஜி தயார்நிலை’ முழுமைத் தற்காப்புப் பாவனைப் பயிற்சியின் மூலம் எதிர்கொள்ளவிருக்கின்றனர்.
புவிசார் அரசியல் பதற்றங்களால் உருவாகும் எரிசக்திப் பாதுகாப்பு நெருக்கடியை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆண்டுக்கான பயிற்சி, பிப்ரவரி 1 முதல் 15 வரை நடைபெறும்.
நீடித்த மின்தடை காரணமாக மின்னிலக்கச் சேவைகள் பாதிக்கப்படுவதும், அதே நேரத்தில் போலிச் செய்திகள், தூண்டுகளவு மோசடிகள் (Phishing) குழப்பத்தையும் அவநம்பிக்கையையும் விதைப்பதும் போன்ற காட்சிகள் இதில் உருவாக்கப்படவுள்ளன.
இத்தகைய நேரத்தில் நமக்கு ஏற்படும் சவால் தொழில்நுட்ப ரீதியானது மட்டுமன்று, அது உளவியல் ரீதியானதும்கூட என்று ஜனவரி 15 (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தற்காப்பு அமைச்சின் துணைக் கொள்கைச் செயலாளர் பிரிகேடியர் ஜெனரல் ஃபிரடெரிக் சூ குறிப்பிட்டார்.
“ஆபத்து வருமா என்பதன்று கேள்வி. அது எப்போது வரும் என்பதே கேள்வி. பழக்கமான அமைப்புகள் செயலிழக்கும்போது, சிங்கப்பூரர்கள் திகைத்து நின்றுவிடாமல் நிலைமையை எதிர்கொள்ள மனத்தளவில் தயாராக இருக்க வேண்டும்,” என்றார் திரு சூ.
தற்காப்பு அமைச்சு, தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், எரிசக்திச் சந்தை ஆணையம், மக்கள் கழகம், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவை இணைந்து வழிநடத்தும் இப்பயிற்சியில் தீவு முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 1,000 நிறுவனங்கள், பள்ளிகள், சமூகக் குழுக்கள் பங்கேற்கவுள்ளன.
இவ்வாண்டுப் பயிற்சியில் சில புதிய அம்சங்களும் இடம்பெறவுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
வழக்கமாக பிப்ரவரி 15 அன்று ஒலிக்கும் பொது எச்சரிக்கை ஒலி, இம்முறை பிப்ரவரி 1 பிற்பகல் 3 மணிக்கு ஒலிக்கவுள்ளது. பயிற்சியின் தொடக்கத்தை அறிவிப்பதோடு, நெருக்கடிகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதை நினைவூட்டும் நோக்கத்திலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டது.
‘முக்கியச் செய்தி’ சமிக்ஞையைத் தொடர்ந்து, முதன்முறையாக தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா சண்முகம் இலவசத் தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகளில் முழுமைத் தற்காப்பு தொடர்பான உரையை நிகழ்த்துவார். இணையம் செயலிழக்கும் நேரங்களில் பாரம்பரிய ஒலிபரப்பு ஊடகங்களின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்தும்.
மற்றொரு புதிய முயற்சியாக, வாகனங்களில் உள்ள இஆர்பி 2.0 கருவி வழியாக அவசர எச்சரிக்கைகள் பரிசோதிக்கப்படவுள்ளன. அதிகாரபூர்வத் தகவல்களைத் தெரிந்துகொள்ள வானொலியை நாடுமாறு வாகன ஓட்டுநர்களுக்கு அக்கருவி அறிவுறுத்தும்.
‘ஒன்என்எஸ்’, ‘வொர்க்பால்’ உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட செயலிகளும் இணையத்தளங்களும் அதே நேரத்தில் ஒரு மணி நேரத்திற்குப் பராமரிப்பு நிலைக்கு மாற்றப்படும். இது சேவைத் தடையைச் சோதிப்பதோடு, பயனர்களும் நிறுவனங்களும் தங்கள் மாற்றுத் திட்டங்களைச் சோதிக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.
அந்த ஒரு மணி நேரத்தின்போது, மின்னிலக்கச் சேவைத் தடங்கல் ஏற்படுகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சும் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் வழங்கியுள்ள வழிகாட்டிகளுக்கான இணைய முகவரிகளைப் பங்கேற்கும் அமைப்புகள் வெளியிடும்.
“மின்சாரம், இணையம், போக்குவரத்து போன்ற அன்றாட வசதிகள் தற்காலிகமாகத் தடைபட்டாலும், அதனை எதிர்கொள்ள சிங்கப்பூரர்களை மனத்தளவிலும் செயல்பாடுகளிலும் தயார்ப்படுத்துவதே இப்பயிற்சியின் நோக்கம். இது ஒட்டுமொத்தச் சமூக முயற்சி,” என்று திரு சூ கூறினார்.
நிச்சயமற்ற தன்மையும் தவறான தகவல்களும் சமூகப் பிளவை உருவாக்க முயலும்போது, ஒற்றுமையாக நிற்பது, ஒருவருக்கொருவர் உதவுவது, அதிகாரபூர்வத் தகவல்களை மட்டுமே நம்புவது மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இடையூறுகளைச் சமாளிக்கத் தயாராக இருப்பதை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் பங்கேற்க விரும்புவோர், https://www.safra.sg/whats-on/safra-total-defence-2026 என்ற இணையத்தளத்தில் பதிவுசெய்யலாம்.
நிறுவனங்களுக்கான அவசரகாலத் தயார்நிலைப் பயிற்சிகள், இணைய மோசடித் தடுப்பு பயிற்சிகள், பள்ளிகளுக்கான தயார்நிலைச் செயல்பாடுகள், சமூக நிலையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஆகியவற்றின்மூலம் மனத்தளவில் தயாராவதை நடைமுறைச் சூழலுக்கு ஏற்றபடி மாற்றுவதே இவ்வாண்டின் எஸ்ஜி தயார்நிலை பாவனைப் பயிற்சியின் நோக்கம்.

