சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டில் (2025) பிறந்த, பிறக்கும் குழந்தைகள் 10 பொருள்களைக் கொண்ட அன்பளிப்புத் தொகுப்பையும் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் கடிதத்தையும் பெறுவார்கள்.
எஸ்ஜி60 குழந்தை பரிசில் உருட்டிச் செல்லும் பெட்டி, பொம்மைகள், மெத்தென்றிருக்கும் துணி பொம்மை (plushie), பிள்ளை வளர்ப்புக் கையேடு உள்ளிட்ட பொருள்கள் இடம்பெற்றிருக்கும்.
மேலும், ஸ்ட்ரா பொருத்தப்பட்ட குவளை, முதுகில் தூக்கும் பை, ‘பெக்கி’ முயல் கதைப்புத்தகங்கள் போன்றவையும் அன்பளிப்புத் தொகுப்பில் இருக்கும்.
ஜனவரி 1ஆம் தேதிக்கும் டிசம்பர் 31ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த சிங்கப்பூர்க் குழந்தைகள் அனைவரும் எஸ்ஜி60 குழந்தை அன்பளிப்புக்குத் தகுதி பெறுவர்.
இந்த அன்பளிப்புக்குப் பதிவு செய்வதற்குமுன் பெற்றோர் தங்கள் பிள்ளையின் பிறப்பை go.gov.sg/SG60BabyGift என்ற இணையப் பக்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பதிவு பிப்ரவரி 28 அன்று தொடங்கி ஓராண்டு காலத்தில் முடிவடையும்.
குடும்பத் தருணங்களை நினைவுகூரும் வகையில், எஸ்ஜி60 கருப்பொருள் வடிவமைப்புகளுடன் உற்சாகமான பின்னணியும், உள்ளூர் தாவரங்கள், விலங்கினங்களின் ஒட்டுவில்லைகளையும் கொண்ட ஒரு புகைப்படப் புத்தகத்தைப் பெற்றோர் பெறுவர்.
குழந்தையின் அறிவாற்றல், உடல் இயக்கத் திறன்களின் வளர்ச்சிக்கு உதவும் எஸ்ஜி60 கருப்பொருளில் அமைந்த மரத்தாலான விளையாட்டுக் கட்டடத் தொகுப்பும் வழங்கப்படும். அதேபோல், பரிசுத்தொகுப்பில் உள்ள பொம்மைகள் குழந்தையின் ஆற்றல்களை வளர்க்கும் என்று தேசிய மக்கள் தொகை, திறனாளர் பிரிவு பிப்ரவரி 28ஆம் தேதி குறிப்பிட்டது.

