உங்கள் குழந்தைகளுக்கான எஸ்ஜி60 அனுபவ சிறப்புத் தொகையைப் பெற 2026, ஜனவரி 31 வரை உங்களுக்கு அவகாசம் உள்ளது. இதற்கு முன்னதாக அந்தச் சிறப்புத்தொகை டிசம்பர் 31ஆம் தேதி காலாவதியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் உங்கள் மூன்றாவது குழந்தைக்கும் அதற்குப் பிறகும் இந்தச் சிறப்புத் தொகையைக் கோரலாம்.
செறிவூட்டல் வகுப்புகளுக்கான இணைய முன்பதிவு, ஆலோசனைத் தளமான ‘ஃப்ளையிங் கேப்’ அமைப்பால், ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளைக் கொண்டாடுவதுடன் வாழ்வுக்கான தேசியக் குடும்ப இயக்கத்தை ஆதரிக்கிறது.
இது, சிங்கப்பூரர்களுக்கும் 15 மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகளைக் கொண்ட நிரந்தரவாசிகளுக்கும் ஸ்டெம் எனும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் கலை, இசை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுபவங்களைப் பெற வழி வகுக்கிறது. ஒருமுறை சிறப்புத் தொகையைப் பெற்றவுடன் அது ஓராண்டுக்குச் செல்லுபடியாகும். முழுப் பட்டியலுக்கு flyingcape.com.sg/sg60 இணையப் பக்கத்துக்குச் செல்லலாம்.
பெரிய குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்தத் திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, சிங்பாஸ் மூலம், பெற்றோர் இரண்டு குழந்தைகள் வரை மட்டுமே சிறப்புத் தொகையைப் பெற முடியும். மக்களின் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள் இணையச் சமர்ப்பிப்புப் படிவத்தின் மூலம் கூடுதல் உதவித் தொகையைக் கோரலாம்.
இதற்கிடையே, வளர்ப்புப் பெற்றோர் இப்போது ‘பாய்ஸ் டவுன் ஃபாஸ்டரிங் சர்வீசஸ்’ மூலம் தங்கள் உதவித் தொகைக் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கலாம்.

