சிங்கப்பூரின் தேசிய மின்னிலக்க நன்கொடை திரட்டுத் தளமான giving.sg, 2025ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில், சாதனை அளவாக $104.9 மில்லியன் நன்கொடை திரட்டியது.
எஸ்ஜி60 கொண்டாட்டங்களில் திளைத்த சிங்கப்பூரர்கள், 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கும் டிசம்பர் 31ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நன்கொடை அள்ளித் தந்ததே இதற்கு முக்கியக் காரணம்.
2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025ஆம் ஆண்டில் திரட்டப்பட்ட நன்கொடை 21 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
2015ஆம் ஆண்டில் giving.sg அறிமுகப்படுத்தப்பட்டது. அதையடுத்து, அத்தளம் மூலம் 2025ஆம் ஆண்டில்தான் ஆக அதிகமான நன்கொடை திரட்டப்பட்டது.
எஸ்ஜி60 கொண்டாட்டங்களை நிறைவு செய்துவைக்கும் அம்சமாக ‘த கிரேட் சிங்கப்பூர் கிவ் 2025’ எனும் நாடு தழுவிய மூன்று மாத நன்கொடை இயக்கமும் இதற்குப் பங்களித்தது.
அக்டோபர் மாதம் 1ஆம் தேதிக்கும் டிசம்பர் 31ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் $47.7 மில்லியனுக்கும் அதிகமான நன்கொடை திரட்டப்பட்டது.
2024ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் $42 மில்லியன் மட்டுமே திரட்டப்பட்டது.
2025ஆம் ஆண்டில் நன்கொடை திரட்டில் கெப்பிட்டாலேண்ட், மைக்ரோன், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, யுஓபி வங்கி முதலிய பங்காளி நிறுவனங்களைச் சேர்ந்த 30,000க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் ஈடுபட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
2025ஆம் ஆண்டிறுதி விழாக்காலத்தின்போது, டிசம்பர் மாதத்தில் மட்டும் $32.3 மில்லியன் நன்கொடை திரட்டப்பட்டது. டிசம்பர் 31ஆம் தேதியன்று $4.7 மில்லியன் நன்கொடை திரட்டப்பட்டது.
இவை giving.sg தளத்தின் வரலாற்றில் ஆக அதிக நன்கொடை திரட்டிய மாதம், நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் ஆதரவில் செயல்பட்டு வரும் giving.sg, முக்கிய நிதித்திரட்டுத் தளமாகத் தொடர்கிறது.

