‘எஸ்ஜி60 ஹார்ட்&சோல் எக்ஸ்பீரியன்ஸ்’ டிசம்பர் 31ல் நிறைவு

2 mins read
b30417ad-7b5b-409f-bfc7-b6fc6ab765ea
‘எஸ்ஜி60 ஹார்ட்&சோல் எக்ஸ்பீரியன்ஸ்’ கண்காட்சி. - படம்: சாவ்பாவ்

வருங்கால சிங்கப்பூரைக் காட்டும் தேசிய கண்காட்சி ஒன்று டிசம்பர் 31ஆம் தேதி நிறைவடையவுள்ளது.

‘எஸ்ஜி60 ஹார்ட்&சோல் எக்ஸ்பீரியன்ஸ்’ (SG60 Heart&Soul Experience) எனப்படும் இந்தக் கண்காட்சிக்கு இரண்டு மில்லியன் பேர் வருகை தருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 150,000 நுழைவுச்சீட்டுகளுக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடும் இந்தக் கண்காட்சி முதன்முறையாக நடத்தப்படுகிறது. ‘எஸ்ஜி60 ஹார்ட்&சோல் எக்ஸ்பீரியன்ஸ்’ கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி தொடங்கியது.

இந்தக் கண்காட்சியின் சில அங்கங்களைக் காண நுழைவுச்சீட்டுகள் தேவை, சிலவற்றுக்குத் தேவையில்லை.

கருத்தாய்வு ஒன்றில் பங்கேற்ற, கண்காட்சியை ‘அனுபவித்த’ 7,000க்கும் அதிகமானோர் சிங்கப்பூரின் வருங்காலம் குறித்தும் அதில் தங்களின் பங்கு குறித்தும் நம்பிக்கை தெரிவித்ததாக தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சும் தேசிய நூலக வாரியமும் வியாழக்கிழமை (டிசம்பர் 18) கூறின. மேலும், சமூக சமத்துவம் மற்றும் பாதிப்புக்கு ஆளாகும் சாத்தியம் உள்ளவர்களை அக்கறையுடன் கவனித்துக்கொள்வதுடன் விவகாரங்களைக் கருணையுடன் கையாளும் தேசமாக சிங்கப்பூர் விளங்கவேண்டும் என்பதும் கருத்தாய்வில் பங்கேற்றோரின் ஆசை.

அதோடு, எல்லா வாழ்க்கைச் சூழல்களிலிருந்தும் வருவோர் இங்கிருப்பதைப் பெருமையாகக் கருதி முன்னேறுவதற்கான வாய்ப்பிருப்பதை உணரும் வண்ணம் சிங்கப்பூர் தொடர்ந்து பாதுகாப்பாக, அனைவரையும் உள்ளடக்கும் ஒற்றுமையான நாடாக இருக்கவேண்டும் என்றும் ஆசைப்படுவதாக பங்கேற்பாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். மனிதர்களின் பங்கு, கலாசார சிறப்புகள், வலுவான சமூக உணர்வை மறக்காமல் சிங்கப்பூர் தொடர்ந்து புத்தாக்கம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் முன்னேறும் என்றும் பலர் நம்பிக்கை தெரிவித்தனர்.

‘எஸ்ஜி60 ஹார்ட்&சோல் எக்ஸ்பீரியன்ஸ்’ சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் படைக்கப்படுகிறது. ஒன்றிலிருந்து ஒன்றரை மணிநேரம் நீடிக்கும் இந்தக் கண்காட்சி ஏழு வயதுக்கும் மேலானவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

கண்காட்சி, ஆர்ச்சர்ட் கேட்வே கடைத்தொகுதியின் மூன்றாம், நான்காம் தளங்களில் இடம்பெறுகிறது. திங்கட்கிழமைகளில் காலை ஒன்பது முதல் மாலை ஆறு மணி வரையும் செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரையும் கண்காட்சியைக் காணலாம்.

கண்காட்சியின் நுழைவுச்சீட்டு தேவைப்படாத வடிவம் ஆர்ச்சர்ட் சென்ட்ரல், ஆர்ச்சர்ட் கேட்வே இரண்டின் முதல் தளங்களில் இடம்பெற்றுள்ளது. இது தினமும் காலை 9 மணி முதல் மாலை 10 மணி வரை திறந்திருக்கும்.

இப்போதும் www.heartandsoul.gov.sg எனும் இணையத்தளத்தில் இலவச நுழைவுச்சீட்டுகளுக்குப் பதிவுசெய்யலாம்.

குறிப்புச் சொற்கள்