சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு தேசிய தினத்தைக் (எஸ்ஜி60) கொண்டாட வரும் ஆகஸ்ட் மாதம் முன்றாம் தேதி இஸ்தானா அதிபர் மாளிகை பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.
எல்லா வயதுப் பிரிவினருடனும் எஸ்ஜி60ஐக் கொண்டாடும் நோக்கில் இஸ்தானா பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படுகிறது. ஆகஸ்ட் மூன்றாம் தேதி காலை 8.30 மணி முதல் மாலை ஆறு மணி வரை இஸ்தானா பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.
இவ்வாண்டு தேசிய தினத்தின் கருப்பொருள் ‘நமது சிங்கப்பூரை ஒன்றாக உருவாக்குவோம்’ (Building Our Singapore Together) என்பதாகும். அதைச் சித்திரிக்கும் கேளிக்கை நடவடிக்கைகள் ஆகஸ்ட் மூன்று இஸ்தானாவில் நடைபெறும்.
பொக்கியா, அமர்ந்தபடி விளையாடப்படும் வாலிபால், மெய்நிகர் அம்பு விடுதல் போன்ற விளையாட்டுகள் அத்தகைய நடவடிக்கைகளில் அடங்கும். உள்ளூர் ஓவியர்களுடனான நடவடிக்கைகள் போன்றவையும் இடம்பெறும்.
ஆகஸ்ட் மூன்றாம் தேதியன்று பார்வையாளர்கள் ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள முக்கிய நுழைவாயில்வழி இஸ்தானா வளாகத்திற்குள் நுழையலாம். அதற்கு ஆக அருகில் இருக்கும் பெருவிரைவு ரயில் நிலையம் டோபி காட். ஐந்து நிமிடங்களில் அங்கிருந்து இஸ்தானாவுக்கு நடந்து செல்லலாம்.