சிங்கப்பூரர்கள் அனைவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் நாட்டின் வளர்ச்சியால் ஏற்பட்ட நன்மைகளைப் பகிர்ந்துகொள்ளும் விதமாகவும் இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் ‘எஸ்ஜி60’ தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) வரவுசெலவுத் திட்டம் 2025ஐத் தாக்கல் செய்து உரையாற்றியபோது பிரதமர் லாரன்ஸ் வோங் அவ்வாறு கூறினார்.
எஸ்ஜி60 தொகுப்பின்கீழ் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள்:
எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகள்
சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டு 21 முதல் 59 வயதிற்குட்பட்ட சிங்கப்பூரர்களுக்கு $600 மதிப்பிலான ‘எஸ்ஜி’ பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.
60 மற்றும் அதற்குமேல் வயதான சிங்கப்பூரர்களுக்கு $200 கூடுதலாக மொத்தம் $800 மதிப்பிலான பற்றுச்சீட்டு வழங்கப்படும். எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகள் ஜூலையில் விநியோகிக்கப்படும். முதலில் மூத்தோருக்கும் பின்னர் மற்றவர்களுக்கும் வழங்கப்படும்.
தனிநபர் வருமான வரிக் கழிவு
2025ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்படும் வருவாய்க்கு தனிநபர்களுக்கு 60% கழிவு வழங்கப்படும். பெரும்பாலும் நடுத்தர வருவாய் ஈட்டும் ஊழியர்கள் பயனடையும் வகையில், அதிகபட்சம் $200 மதிப்பிலான கழிவு வழங்கப்படும்.
எஸ்ஜி60 குழந்தை அன்பளிப்பு
இவ்வாண்டு பிறக்கும் சிங்கப்பூர்க் குழந்தைகள் அனைவரும் எஸ்ஜி60 குழந்தை அன்பளிப்புக்குத் தகுதி பெறுவர்.
எஸ்ஜி கலாசார சிறப்புத்தொகை
உள்ளூர் கலை, மரபுடைமை நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க 18 மற்றும் அதற்குமேல் வயதுடைய சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் $100 மதிப்பிலான சிறப்புத்தொகை வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
செப்டம்பர் மாதம் வழங்கப்படும் இந்தச் சிறப்புத்தொகையை 2028ஆம் ஆண்டுவரை கலை, கலாசார நிகழ்ச்சிகள், அரும்பொருளகக் கண்காட்சிகள் போன்றவற்றுக்குச் செல்லப் பயன்படுத்தலாம்.
உணவங்காடிக் கடைக்காரர்களுக்கு உதவி
அரசாங்கமும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நடத்துநர்களும் நிர்வகிக்கும் உணவங்காடி நிலையங்களில் உள்ள கடைக்காரர்களுக்கு ஒருமுறை மட்டும் வழங்கப்படும் வாடகை ஆதரவுத் தொகையாக $600 வழங்கப்படும்.
உணவங்காடி நிலையங்களைப் புதுப்பித்து, மேம்படுத்தவும் புதிய நிலையங்களைக் கட்டவும் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் $1 பில்லியன் வரையிலான நிதி ஒதுக்கப்படும்.
‘எஸ்ஜி60 ஆக்டிவ்எஸ்ஜி’ சிறப்புத்தொகை
குடும்பத்தினர், நண்பர்களுடன் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட உதவும் வகையில் ‘ஆக்டிவ்எஸ்ஜி’ உறுப்பினர்கள் அனைவருக்கும் சிறப்புத்தொகையாக $100 வழங்கப்படும்.
‘எஸ்ஜி வழங்கும்’ திட்டம்
நடப்பில் உள்ள நன்கொடைத் திட்டங்களான ‘கலாசார இணை நிதித் திட்டம்’, சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட அறநிறுவனங்களின் ‘மேம்பட்ட நிதித் திரட்டுத் திட்டம்’ ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கக் கூடுதலாக $370 மில்லியன் நிதி ஒதுக்கப்படும்.
மேலும், புதிதாக $250 மில்லியன் மதிப்பிலான ‘எஸ்ஜி வழங்கும்’ (SG Gives) திட்டம் அறிமுகம் காண்கிறது.
சுய உதவிக் குழுக்களுக்குக் கூடுதல் நிதியுதவி
சிண்டா போன்ற சுய உதவிக் குழுக்கள் தங்கள் திட்டங்களை மேம்படுத்தவும் சமூகங்களுக்குக் கூடுதல் ஆதரவளிக்கவும் ஏதுவாக அடுத்த ஐந்தாண்டுகளில் கூடுதலாக $60 மில்லியன் நிதி வழங்கப்படவிருக்கிறது.