சிங்கப்பூரின் 60வது ஆண்டு சுதந்திரக் கொண்டாட்டங்களை முன்னிட்டு மக்கள் கழக மகளிர் ஒருங்கிணைப்பு மன்றத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சுமார் 106 மகளிர் செயற்குழுக்களுக்கு இவ்வாண்டு $300,000 மதிப்புள்ள ‘எஸ்ஜி60’ மக்கள் கழக ஈடுபாட்டு மானியம் வழங்கப்படும் என்று தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் மார்ச் 2ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.
‘ஒன் ஃபேரர்’ ஹோட்டல் வளாகத்தில் மக்கள் கழக மகளிர் ஒருங்கிணைப்பு மன்றம் ஏற்பாடு செய்த அனைத்துலக மகளிர் தினக் கொண்டாட்டத்தின்போது அமைச்சர் சிம் ஆன் இவ்வாறு அறிவித்தார்.
“கடந்த 60 ஆண்டுகள் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு மகளிர் பெரும் பங்காற்றியுள்ளனர். மேலும் பல பெண்கள் சமூக முயற்சிகளில் ஈடுபட்டுத் தொடர்ந்து புதிய திட்டங்களுக்குப் பங்களிக்க இந்த மானியம் ஊக்குவிக்கும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மக்கள் கழக மகளிர் ஒருங்கிணைப்பு மன்றம், தற்போது 13 கூட்டு நிறுவனங்களுடன் “மேம்பட்ட நான், மேம்பட்ட நாங்கள்” என்ற 32 பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. 2020ஆம் ஆண்டில் ஏழு பயிலரங்குகளுடன் தொடங்கிய இந்த முயற்சி, நிதி நிர்வாகம், உடல்நலம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய தகவல்களைப் பெண்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தரவு, செயற்கை நுண்ணறிவுப் பொறியாளர் உத்தாரா வெங்கடாச்சாரி, 26, அண்மையில் ஃபெங்ஷான் செயற்குழு ஏற்பாடு செய்த நிதித் திட்டமிடல் பயிலரங்கில் கலந்துகொண்டார்.
“சேமிப்பதன் முக்கியத்துவத்தையும் சேமிப்பை வளர்ப்பதற்கான அடிப்படைகளையும் புரிந்துகொள்ள இந்தப் பயிலரங்கு எனக்குப் பயனுள்ளதாக அமைந்தது,” என்று பகிர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து மகளிருக்கான “மேம்பட்ட நான், மேம்பட்ட நாங்கள்” மின்கையேட்டை மக்கள் கழக மகளிர் ஒருங்கிணைப்பு மன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கையேட்டைப் பயன்படுத்திப் பெண்கள் மற்றும் குடும்பங்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப சமூக நிகழ்ச்சிகள் திட்டமிடப்படும்.
இதுபோன்ற உதவிகளால் பெண்கள் தங்களின் படைப்பாற்றல் திறனையும் புத்தாக்கத்தையும் வளர்த்துக்கொள்ளலாம் என்று கூறினார் நிகழ்ச்சி மேலாளராகப் பணிபுரியும் ஏஷ்லி ஐஸ்வர்யா, 26.
தொடர்புடைய செய்திகள்
“கிடைக்கும் உதவியைப் பயன்படுத்தித் திறன்களை வளர்த்துக்கொள்ளும் பெண்கள், சமூகத்தின் பல முக்கியக் கொள்கைகளுக்குக் கைகொடுப்பர். இது சிங்கப்பூரின் தொடர் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காக அமையும்,” என்றார் அவர்.