போலி விளம்பரங்கள் குறித்து மருத்துவ நிலையங்கள் எச்சரிக்கை

போலி விளம்பரங்கள் குறித்து மருத்துவ நிலையங்கள் எச்சரிக்கை

1 mins read
1bd6e63c-4c9f-40d0-8f07-764d9cfef0dc
விளம்பரத்தில் தோன்றுபவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையின் ஊழியரோ, பேராளரோ அல்லர் என்று அம்மருத்துவமனை தெளிவுபடுத்தியுள்ளது. - படம்: ஃபேஸ்புக்/எஸ்ஜிஎச்

சிங்கப்பூர் பொது மருத்துவமனை (எஸ்ஜிஎச்), தேசிய சுகாதாரக் குழுமம் (என்எச்ஜி ஹெல்த்) ஆகியவற்றின் சீருடைகளை அணிந்து, இணையத்தில் சுகாதாரப் பொருள்களை விற்கும் போலி விளம்பரங்கள் குறித்துப் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அவ்விரு சுகாதார அமைப்புகளும் கேட்டுக்கொண்டுள்ளன.

இது தொடர்பாக எஸ்ஜிஎச் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், தங்கள் மருத்துவமனையின் ஆய்வக மேலங்கியும் சிங்ஹெல்த் சீருடையும் அணிந்த பெண் ஒருவர் டிக்டாக்கில் மருந்துப் பொருள்களை விளம்பரப்படுத்துவது தெரியவந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

அந்தப் பெண் எஸ்ஜிஎச் ஊழியரோ அல்லது அதன் பிரதிநிதியோ அல்லர் என்றும் சட்டப்படி எந்தவொரு குறிப்பிட்ட விற்பனைச் சின்னத்தையோ பொருளையோ தங்களது மருத்துவமனை ஆதரிப்பதில்லை என்றும் அது தெளிவுபடுத்தியுள்ளது.

இதேபோல், என்எச்ஜி குழுமமும் ஒரு போலிக் காணொளி குறித்து எச்சரித்துள்ளது.

தங்களின் சீருடையை அணிந்த ஒருவர், தம்மை மருந்தாளுநர் எனக் கூறிக்கொண்டு மருத்துவப் பொருள்களை விற்பதாகப் பதிவிட்டுள்ளது. டான் டோக் செங், கூ டெக் புவாட் உள்ளிட்ட பல பொது மருத்துவமனைகளை உள்ளடக்கிய என்எச்ஜி குழுமம், அந்த மோசடி விளம்பரங்களுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை என மறுத்துள்ளது.

பொதுமக்கள் இணையத்தில் முன்பின் தெரியாத தளங்களிலிருந்து மருந்துகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் இத்தகைய மிகைப்படுத்தப்பட்ட போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஐயம் இருப்பின் மருத்துவர்களிடம் ஆலோசிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்