சிங்கப்பூரில் தங்க போலி திருமணத்துக்காக $20,000 தந்த சீனப் பெண்

சிங்கப்பூரில் தங்க போலி திருமணத்துக்காக $20,000 தந்த சீனப் பெண்

2 mins read
c1a0357e-94ae-4ad4-9abd-fa1ef86571cc
சோதனைகளுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர். - படம்: மைக்ரே‌ஷன் லா அப்டேட்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவருடன் போலி திருமணம் செய்துகொண்ட சீனாவைச் சேர்ந்த 31 வயது மாதுக்கு ஆறு மாதங்கள் மற்றும் எட்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சிங்கப்பூரில் இருப்பதற்காக அவர் அவ்வாறு செய்தார். ‌ஷோங் ஃபாங்யுவான் எனும் அப்பெண் மீது குடிநுழைவுச் சட்டத்தின்கீழ் ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக ‌ஷின் மின் ஊடகம் தெரிவித்தது.

அவற்றில் இரண்டு குற்றச்சாட்டுகளை ‌ஷோங் ஏற்றுக்கொண்டார். தீர்ப்பளிக்கும்போது இதர குற்றச்சாட்டுகளும் கருத்தில்கொள்ளப்பட்டன.

கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாத நடுப்பகுதியில் ‌ஷோங், 35 வயது சுவோ பெய்ஹாவைச் சந்தித்ததாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது. போலி திருமண ஏற்பாடு குறித்துப் பேச நண்பரின் உதவியுடன் அவர் இந்நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கி வேறொரு நண்பருடன் சேர்ந்து தொழில் தொடங்குவது அவரின் நோக்கம்.

போலி திருமணம் செய்துகொள்ள சுவோ, முதல் சந்திப்பில் 80,000 வெள்ளி தருமாறு கோரினார். ‌ஷோங்குக்கு அந்தத் தொகை அதிகமாக இருந்ததால் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அது குறைக்கப்பட்டது.

திருமணத்தைப் பதிவுசெய்தவுடன் சுவோக்கு 2,000 வெள்ளி வழங்க ‌ஷோங் ஒப்புக்கொண்டார். பிறகு சடங்குகள் முடிந்தவுடன் 8,000 வெள்ளியும் ‌தான் நிரந்தரவாச உரிமை பெறும் வரை ஆண்டுதோறும் 10,000 வெள்ளியும் செலுத்த ‌ஷோங் ஒப்புக்கொண்டார்.

உண்மையிலேயே திருமணம் ஆகிவிட்டதாகப் பிறரை நம்ப வைக்க ‌ஷோங், வாரத்துக்கு ஒருமுறை தனது வீட்டில் தங்குமாறு சுவோவைக் கேட்டுக்கொண்டார்.

இருவருக்கும் 2023ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பதிவுத் திருமணம் நடைபெற்றது. பிறகு அந்த ஆண்டு டிசம்பர் மாதம் நான்காம் தேதி பீச் ரோட்டில் உள்ள உணவகம் ஒன்றில் திருமணச் சடங்கு நடந்தது.

ஒப்புக்கொண்டபடி ஒவ்வொரு ‘கட்டத்திலும்’ ‌ஷோங் கட்டணத்தைச் செலுத்தினார்.

2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் ‌ஷோங், சுவோக்கு மொத்தம் 20,000 வெள்ளி வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து சுவோ, ‌ஷோங்கின் சார்பில் மூன்று குறுகியகால வருகை அனுமதி அட்டைகளுக்கும் இரண்டு நீண்டகால வருகை அனுமதி அட்டைகளுக்கும் விண்ணப்பித்திருந்தார்.

அதிகாரிகள், 2024 ஜூலை ஒன்பதாம் தேதி ஜூ சியட்டில் ‌ஷோங் வீட்டையும் மார்சிலிங்கில் சுவோ வீட்டையும் சோதனையிட்டனர். இருவரும் ஒன்றாக வாழாததை அவர்கள் கண்டுபிடித்தனர்.

இருவரும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்திருமணம்ஏமாற்றுகைதுசிறை