பத்தாண்டுகளுக்குமேல் தொடரும் தொண்டூழியப் பயணம்: ஷாந்தினி சுப்ரமணியம்

பத்தாண்டுகளுக்குமேல் தொடரும் தொண்டூழியப் பயணம்: ஷாந்தினி சுப்ரமணியம்

2 mins read
4972a13d-ca79-474e-a65c-d68688d429a5
‘புரோஜெக்ட் கேரிங் ஹார்ட்ஸ்’ திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈடுபட்ட ஷாந்தினி சுப்ரமணியம் (இடமிருந்து மூன்றாமவர்). - படம்: சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தாதிமைத் துறை

கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி வெளியிடப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின்போது பிரதமர் லாரன்ஸ் வோங் ஏறக்குறைய பத்தாண்டுகளாகத் தொண்டூழியராக இருக்கும் ஷாந்தினி சுப்ரமணியம் பற்றிப் பேசியிருந்தார்.

தங்கள் சொந்த வழிகளில் மாற்றத்தைச் செய்யவிரும்பிய சாதாரண சிங்கப்பூரர்களில் அவரும் ஒருவராகத் திகழ்ந்தார்.

ஷாந்தினி 23 வயதிலேயே, மற்றவர்களுக்கு உதவுவதில் அனுபவமிக்கவராக இருந்தார். அவர் 11 வயதிலேயே ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் அவரது பயணத்தைத் தொடங்கினார்.

“இந்தத் தொண்டூழிய அனுபவத்திற்கு முன்னரே, எனது புளோக்கின் கீழ்த்தளத்தில் உள்ள மூத்தோரைப் பார்க்கும்போதெல்லாம் புன்னகைத்து கை அசைப்பேன். அது எனக்கு இயல்பாகவே வரும்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் கூறினார் ஷாந்தினி.

அதற்கு அடுத்தபடியாக, தை ஹுவா குவான் அறநிறுவனத்தில் மூத்தோருடன் ‘ஸும்பா’, கைவினை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார்.

பலதுறைத் தொழிற்கல்லூரியில் தாதிமைத் துறையில் படித்துக்கொண்டே, சிங்கப்பூர் இளையர் தொண்டூழியர் அணியில் தொண்டூழியம் புரிந்தபோது, அறிவுத்திறன் குறைபாடு உள்ளவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஷாந்தினிக்குக் கிடைத்தது. அது அவருக்குப் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது.

மற்ற தொண்டூழியர்களுடன் சேர்ந்து, ‘மைன்ட்ஸ்’ அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குக் கலை, கைவினை, பலகாரங்கள் தயாரிக்கும் நடவடிக்கைகளுக்கு அவர் ஏற்பாடு செய்தார்.

“அவர்களுக்குச் சவால்கள் இருந்தபோதும், எங்களுடன் நடவடிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக இருந்தார்கள்,” என்றார் ஷாந்தினி.

நிதி நெருக்கடிகளைச் சந்தித்த ஒரு குடும்பத்திலிருந்து வந்ததால், அத்தகைய அர்த்தமுள்ள, வாழ்க்கையை மாற்றியமைக்கும் தருணங்கள், அவரது சொந்தச் சூழ்நிலையையும் தாண்டி, நன்றியுணர்வு, ஆக்கபூர்வ எண்ணங்கள் குறித்த பாடங்களை அவருக்குக் கற்றுக்கொடுத்தன.

அவரது இளையச் சகோதரர் பெருமூளைவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரைக் கவனித்துக்கொள்வதிலிருந்தும் மூத்தோருடன் பழகிய அனுபவங்களிலிருந்தும் தாதிமைத் துறையைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்தது.

ஷாந்தினி தகவல், தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் தாதிமைத் துறையில் பயின்றார். பின்னர், நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தாதிமைத் துறையில் பட்டயம் பெற்றார். தற்போது சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் தாதிமைத் துறையில் பட்டக்கல்வியைத் தொடர்கிறார்.

குறிப்புச் சொற்கள்