சிங்கப்பூரின் கலாசார அடையாளத்தின் எதிர்காலத்தை வடிவமைத்து, கலைத்துறையை மேம்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டு 55 தனிநபர்களுக்கு கலை, மரபுடைமை உபகாரச் சம்பளங்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசியக் கலை மன்றம், தேசிய மரபுடைமைக் கழகம் ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து ஆண்டுதோறும் இந்த விருதுகளை வழங்குகின்றன. இந்த உபகாரச் சம்பளங்களை இந்த ஆண்டு ஆக அதிகமானோர் பெற்றுள்ளனர்.
அதிபர் சவால் அறநிதியின் ஆதரவுடன் 54 பேர் கலைத்துறைக்கான உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ளனர். தேசிய மரபுடைமைக் கழகத்தின் ஆதரவுடன் ஒருவர் மரபுடைமைத்துறைக்கான விருதைப் பெற்றுள்ளார். விருது பெற்றவர்களில் 41 பேர் பட்டயக்கல்வி பயிலவுள்ளனர். எஞ்சியவர்களில் 5 பேர் இளங்கலைப் பட்டப்படிப்பையும் 9 பேர் முதுகலைப் பட்டப்படிப்பையும் தொடரவுள்ளனர்.
இந்த மாணவர்களில் பலர் லாசால், நாஃபா, சிங்கப்பூர்க் கலைப் பள்ளி ஆகிய உள்ளூர் முன்னணி கலைக் கல்வி நிலையங்களில் தங்கள் கல்வியைத் தொடரவுள்ளனர். அத்துடன், புகழ்பெற்ற பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் இவர்களில் சிலர் பயிலவிருக்கிறார்கள்.
இந்த விருது வழங்கும் விழாவில் கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.
விருது பெற்றவர்களைப் பாராட்டிப் பேசிய அவர், சிங்கப்பூரின் அடையாளத்தை வடிவமைப்பதில் கலைகளுக்கும் மரபுடைமைக்கும் உள்ள முக்கியப் பங்கைத் தமது சிறப்புரையில் வலியுறுத்தினார்.
“பன்முகத்தன்மை கொண்ட நமது சமூகத்தின் பொதுவான அனுபவங்களைப் பிரதிபலிக்கும் குரலாகக் கலையும் மரபுடைமையும் திகழ்கின்றன. அவற்றின் வழியாகவே நமது கதைகள் தலைமுறைகளைத் தாண்டிப் பயணம் செய்கின்றன,” என்று திருவாட்டி லோ குறிப்பிட்டார்.
நமது எதிர்காலத் திட்டங்களுக்கும் தளங்களுக்கும் உறுதியான அடித்தளம் இருந்தாலும், கலைஞர்கள், மரபுடைமைப் பணியாளர்கள், கலாசார ஊழியர்கள், படைப்பாற்றல்மிக்க வல்லுநர்கள் ஆகியோரால்தான் அந்தத் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ எங்குப் படித்தாலும், தொடர்ந்து புதிய கண்ணோட்டங்களை ஏற்கும் திறந்த மனப்பான்மையுடன் இருக்குமாறும் திருவாட்டி லோ இளம் கலைஞர்களை ஊக்குவித்தார்.
அடையாளத்தை வடிவமைக்கும் கலைகள்
லாசால் கலைக் கல்லூரியில் கேளிக்கைத் துறைக்கான திறன்களைப் பயிலும் (music business) இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடரவுள்ள 21 வயது தார்மின் தனராஜன், இந்த உபகாரச் சம்பளத்தைப் பெற்றவர்களில் ஒருவர். மேற்கத்திய செவ்விசை ஓபரா பயிற்சி பெற்ற இவர், தற்போது பாப் இசையில் கால்பதிக்கிறார்.
“கலைத்துறையில் எனக்கு நீண்டகாலமாகவே தீராத ஆர்வம் உண்டு. எனது கல்வியை மேம்படுத்திக்கொள்ளவும், புதிய கலை வடிவங்களை ஆராயவும் இந்த விருது எனக்குச் சிறந்த தளத்தை அமைத்துக்கொடுத்துள்ளது. சிங்கப்பூரின் கலைத்துறை நமக்கும் நம் நாட்டிற்கும் அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்தது,” என்றார் அவர்.
தொழில்நுட்பம் சார்ந்த ஊடகக் கலைகளில் ஈடுபாடு கொண்ட 34 வயது கபிலன் நாயுடு, லாசால் கலைக் கல்லூரியில் நுண்கலையில் முதுகலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளவுள்ளார். கணினி அமைப்புகள் மனித அனுபவங்களை எப்படி வடிவமைக்கின்றன என்பதை அவர் தற்போது ஆராய்ந்து வருகிறார்.
கலைச் சமூகத்திற்குத் தாம் ஆற்றிய பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்த அவர், தொழில்நுட்ப ஊடகக் கலைத்துறையை மேலும் மேம்படுத்த விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
“இந்த உபகாரச் சம்பளத்தைப் பெற்றதை எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன். நிதிச் சுமையைக் குறித்த எந்தக் கவலையுமின்றி, எனது ஆராய்ச்சியிலும் நான் செய்ய விரும்பும் கலைப் படைப்புகளிலும் முழுமையாகக் கவனம் செலுத்த இது எனக்குப் பெரும் சுதந்திரத்தை அளித்துள்ளது,” என்றார் அவர்.

