வெப்பத்தைச் சமாளிக்கப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பகிர்வது முக்கியம்: ஆய்வாளர்

2 mins read
15bf781b-3a9d-48e9-9f02-3a1ed8356eea
காப்30 மாநாட்டில் உரையாற்றிய பேராசிரியர் வின்ஸ்டன் சோவ். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பகிர்ந்துகொள்வது, சுட்டெரிக்கும் வெப்பத்தைச் சமாளிக்கும் தென்கிழக்காசிய நாடுகளின் திறன்களில் மிகவும் முக்கியமாகும் எனப் பருவநிலை ஆய்வாளர் வின்ஸ்டன் சோவ் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

அவ்வட்டாரத்தில் குடிசைப் பகுதிகளில் போன்று முறையான கட்டமைப்பு இல்லாத குடியிருப்புகளில் வசிப்போர், நீண்ட நேரம் வெளிப்புற வேலைகளில் ஈடுபடுவோர் வெப்பநிலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆட்படும் அபாயம் இருப்பதாகப் பிரேசிலில் நடைபெற்றுவரும் காப்30 (COP 30) மாநாட்டின் இரண்டாவது நாளான நவம்பர் 11ஆம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

பருவநிலை மாற்றத்திற்கான காலநிலை தாக்கம், பாதிப்பு ஆகியவற்றிற்கான ஐக்கிய நாட்டுச் சபையின் அரசாங்கங்களுக்கு இடையேயான பணிக்குழுவின் இணைத் தலைவர் அவர்.

குறைவான மாசுபாட்டை ஏற்படுத்தவும் குளிர்ந்த நிலையை மேலும் அணுகக்கூடியதாகவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள சிங்கப்பூர் உட்பட 185 நகரங்கள் உறுதியளித்ததையடுத்து அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.

புதைபடிவ எரிபொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது குளிர்வித்தல் நீடிக்க முடியாததாக இருக்கலாம், அது உமிழ்வுகளுக்குப் பங்களிக்கிறது.

குளிரூட்டிகளில் குளிர்ந்த நிலையை ஏற்படுத்த பயன்படுத்தப்படும் சில வாயுக்ள்கூட பூமியை வெப்பமயமாக்கும் சக்திவாய்ந்த வாயுக்ளாகும்.

நவம்பர் 11ஆம் தேதி வெளியான ஐக்கிய நாட்டுச் சுற்றுச்சூழல் திட்ட அறிக்கையின்படி, அதிகரித்துவரும் வெப்பநிலை, மக்கள்தொகை, சிக்கனத்திறன் இல்லாத குளிரூட்டும் அமைப்புகளுக்கான அணுகல் ஆகியவற்றால் 2050ஆம் ஆண்டுக்குள் குளிர்விப்பதற்கான தேவை மும்மடங்காக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவை கட்டுப்படுத்தப்படாவிடில், குளிரூட்டும் சாதனங்களிலிருந்து வெளியேறும் உமிழ்வுகள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும்.

இது, மின் கட்டமைப்புகளைத் திணறடிப்பதோடு மட்டுமன்றி பருவநிலை மாற்றத்திற்கான இலக்குகளை எட்ட முடியாத நிலைக்குத் தள்ளும் என அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

“தென்கிழக்காசிய நாடுகளின் சில பகுதிகளுக்கு உள்ள சவால் என்னவென்றால், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான வளங்கள் குறைவாக இருப்பதுதான். அந்த ஆற்றலுக்கான அணுகலைப் பெறுவதில் அவை தவித்து வருகின்றன,” என்றார் பேராசிரியர் சோவ்.

இருப்பினும், அவ்வட்டாரத்தின் சில பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் அதிகளவில் இருப்பதாகவும் எனவே, அவை ஆசியானின் புதுப்பிக்கத்தக்க மின் கட்டமைப்புக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்