சீனாவைச் சேர்ந்த பிரபல ஆடைகள் நிறுவனமான ஷீன், சிங்கப்பூரில் அதன் தலைமையகத்தில் பணிபுரிந்த 17 ஊழியர்களை செப்டம்பர் 25ஆம் தேதியன்று ஆட்குறைப்பு செய்தது.
சிங்கப்பூரில் தொடர்ந்து கூடுதல் ஊழியர்களைப் பணியமர்த்தப்போவதாக அது தெரிவித்துள்ளபோதிலும் அந்த 17 பேரை அது ஆட்குறைப்பு செய்தது.
“சிங்கப்பூரில் ஷீன் நிறுவனம் தொடர்ந்து அதன் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது. ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே முன்பைவிட தற்போதைய அலுவலகம் பெரிதாக உள்ளது. சிங்கப்பூரில் உள்ள ஷீன் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப ஆய்வு, மேம்பாட்டுக் குழுவும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. ஒருசில ஊழியர்கள் வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,” என்று ஷீன் நிறுவனம் கூறியது.
ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அதுகுறித்து செப்டம்பர் 25ஆம் தேதியன்று தகவல் தெரிவிக்கப்பட்டதாக அந்நிறுவனம் கூறியது.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஏதேனும் ஆட்குறைப்புத் தொகுப்புத் திட்டம் வழங்கப்பட்டதா என்பது குறித்து ஷீன் நிறுவனம் தகவல் வெளியிடவில்லை.
சிங்கப்பூரில் தற்போது அதற்கு மொத்தம் எத்தனை ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பது குறித்தும் அது தெரிவிக்கவில்லை.
சீனாவில் நிறுவப்பட்ட ஷீன் நிறுவனம், கடந்த பத்து ஆண்டுகளாக அசுர வளர்ச்சி அடைந்தது.
தனக்கு 16,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருப்பதாகவும் 150க்கும் அதிகமான நாடுகளில் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுவதாகவும் அது கூறியது.

