ஷெங் சியோங் பேரங்காடியின் தலைமை அலுவலகமும் அதன் சரக்குக் கிடங்கு மற்றும் விநியோக மையமும் சுங்கை காடுட்டுக்கு இடமாறுகிறது.
விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதி அந்த இடமாற்றம் என்று ஷெங் சியோங் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
மேலும், வருங்கால வளர்ச்சியைக் கணக்கிட்டு, தற்போது உள்ளதைக் காட்டிலும் வசதிமிகுந்த இடத்திற்கு அது மாறுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த 10 முதல் 15 ஆண்டுகள் வரை, ஆண்டுக்கு மூன்று புதிய பேரங்காடிக் கிளைகளைத் திறப்பதும் விரிவாக்கத் திட்டத்தில் உள்ளதாக ஷெங் சியோங் கூறியுள்ளது.
தற்போது மண்டாய் லிங்கில் அமைந்துள்ள அதன் தலைமையகம், சரக்குக் கிடங்கு மற்றும் விநியோக மையத்தைக் காட்டிலும் சுங்கை காடுட் நிலப் பரப்பு 2.5 மடங்கு அதிகம்.
குறைந்தபட்சம் 120 ஷெங் சியோங் பேரங்காடிகளுக்குத் தேவையான உதவிகளை அந்தப் புதிய இடம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய இடத்தில் கிட்டத்தட்ட 50 பேரங்காடிகளுக்கான உதவிகளைச் செய்யும் அளவுக்கே வசதிகள் உள்ளன.
சுங்கை காடுட் இடத்தின் பரப்பளவு 61,297 சதுர மீட்டர். பல்வேறு வெப்பநிலைகளில் சரக்குகளை இருப்பு வைக்கும் சேமிப்பு மண்டலமும் ஒருங்கிணைந்த உணவுப் பதப்படுத்தும் வசதிகளும் அங்கு இருக்கும்.
மனிதர்களுக்குப் பதில் இயந்திரங்கள் கையாலும் வகையிலான தொழில்நுட்பத்தை ஷெங் சியோங்கின் புதிய மையம் கடைப்பிடிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
தவறுகளைக் குறைப்பது, வேலையிடப் பாதுகாப்பை அதிகரிப்பது, சரக்குக் கிடங்கு நிர்வாகத்தை வலுப்படுத்துவது, செலவைக் குறைக்கும் செயல்களை அதிகரிப்பது போன்றவையும் அதன் விரிவாக்கத் திட்டங்களில் இடம்பெற்று உள்ளன.
சுங்கை காடுட் சொத்து 33 ஆண்டு காலக் குத்தகையைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் டிசம்பர் 18ஆம் தேதி முதல் புதிய இடத்தில் இருந்து செயல்பட ஷெங் சியோங் திட்டமிட்டு உள்ளது.