ஷெங் சியோங் பேரங்காடி அத்தியாவசியப் பொருள்களைக் கட்டுப்படியான விலையில் விற்க நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரிவித்துள்ளது.
ஈரான் போர் காரணமாக எரிபொருள் விநியோகம் மற்றும் வேளாண் தொழில் சார்ந்த பொருள்களின் விலை உலக அளவில் உயர்ந்துள்ளது. அதன் தாக்கம் சிங்கப்பூரிலும் கொஞ்சம் கொஞ்சமாக உணரப்படுகிறது.
ஷெங் சியோங் குழுமம் அதன் பங்குதாரர்களுக்கு விளக்கம் அளிக்கும் ஆண்டு பொதுச் சந்திப்பை ஏப்ரல் 29ஆம் தேதி நடத்தவுள்ள நிலையில் தற்போது விலைவாசி தொடர்பாகத் தகவல் வெளியாகியுள்ளது.
“தற்போதைய நிலவரப்படி ஈரான் போர் காரணமாக ஷெங் சியோங்கின் விநியோகக் கட்டமைப்பில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. அதனால் எப்போதும் போல் அத்தியாவசியப் பொருள்கள் பேரங்காடிகளில் விற்கப்படுகிறது,” என்று ஷெங் சியோங் குறிப்பிட்டது.
“விலை அதிகரிப்பு தொடர்பாக அழுத்தங்கள் இருந்தாலும் அத்தியாவசியப் பொருள்கள் தொடர்ந்து விற்பனையில் இருப்பதை நிறுவனம் உறுதிசெய்யும். அதேபோல் அவை கட்டுப்படியான விலையில் இருப்பதிலும் கவனம் செலுத்தப்படும்,” என்று ஷெங் சியோங் தெரிவித்தது.
ஈரான் போர் காரணமாக வர்த்தகத்தில் சில சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக ஷெங் சியோங் கூறியது. குறிப்பாகப் பொருள்களைக் கொண்டு வரும் கப்பல்களின் சேவை விலை அதிகரித்துள்ளதாக அது குறிப்பிட்டது.
உலக அளவில் பல நாடுகள் மற்றும் வட்டாரங்களிலிருந்து பொருள்களை வாங்குவதால் தமது விநியோகச் சங்கிலி உறுதியாக உள்ளதாக ஷெங் சியோங் கூறியது. இதனால் ஒரு நாட்டிலோ, ஒரு வர்த்தகப் பாதையில் பிரச்சினை ஏற்பட்டாலோ மற்ற நாடுகள் மற்றும் பாதைகளில் இருந்து பொருள்கள் சிங்கப்பூருக்குத் தொடர்ந்து வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஷெங் சியோங் நிறுவனம் அதன் சொந்தப் பெயரில் விற்பனை செய்யும் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்தப் பொருள்களின் விற்பனையில் மட்டும் 31.3 விழுக்காடு லாபம் கிடைத்துள்ளது.

