நீல நிற சமூக சுகாதார உதவித் திட்ட (சாஸ்) அட்டை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வரும் மார்ச் 1ஆம் தேதியிலிருந்து வியாழக்கிழமைதோறும் ஷெங் சியோங் பேரங்காடிக் குழுமம் நான்கு விழுக்காடு தள்ளுபடி வழங்கவுள்ளது.
இவ்வாண்டு இறுதிவரை இச்சலுகை நீடிக்கும். ஒருநாளைக்கு அதிகபட்சம் $200 வரையிலான பொருள்களுக்கு இத்தள்ளுபடி வழங்கப்படும்.
தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தங்களது காகித அல்லது மின்னிலக்க சாஸ் அட்டையைக் கட்டணம் செலுத்தும் முகப்பில் காண்பிக்க வேண்டும்.
மாதாந்தர தலைக்கணக்கு வருவாய் $1,500 வரையுள்ள குடும்பங்கள் நீல நிற சாஸ் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
குழந்தைகளுக்கான பால்மாவு (முதலாம், இரண்டாம் நிலை), புகையிலை, மது, தொலைபேசி அட்டைகள், மருந்துப் பொருள்கள், மருத்துவக் கருவிகள் ஆகியவை தவிர்த்து மற்ற அனைத்துப் பொருள்களும் தள்ளுபடி பெற தகுதியானவை. மட்கக்கூடிய நெகிழிப் பைகளுக்கும் ஷெங் சியோங் பற்றுச்சீட்டுகளுக்கும் தள்ளுபடி வழங்கப்பட மாட்டாது.
மேலும், 60 மற்றும் அதற்குமேல் வயதுடைய சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுக்கு செவ்வாய்க்கிழமை, புதன்கிழமைகளில் 4% தள்ளுபடி வழங்கப்படும் என்று ஷெங் சியோங் பேச்சாளர் தெரிவித்தார். அத்தள்ளுபடியைப் பெற அவர்கள் தங்கள் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும்.
எஸ்ஜி60 கொண்டாட்டங்களை ஒட்டி, சமூகத்திற்குத் திருப்பித் தருவதில் தள்ளுபடி வழங்குவதும் ஒரு வழிமுறை என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, ஃபேர்பிரைஸ் குழுமமும் மூத்த குடிமக்களுக்கும் குறைந்த வருமானப் பிரிவினருக்கும் தனது பேரங்காடிகளிலும் யூனிட்டி மருந்தகங்களிலும் வழங்கப்படும் தள்ளுபடியை இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது.