சிங்கப்பூரின் பிரபல பேரங்காடிகளில் ஒன்றான ஷெங் சியோங், மேலும் ஐந்து புதிய பேரங்காடிகளைத் திறந்த பிறகு அதன் லாபம் கூடியிருக்கிறது.
இவ்வாண்டு, செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான 3வது காலாண்டில் ஷெங் சியோங்கின் நிகர லாபம் 12.6 விழுக்காடு அதிகரித்து $39.1 மில்லியன் வெள்ளி கிடைத்துள்ளது.
இதற்கு முந்தைய ஆண்டில் நிகர லாபம் $34.7 மில்லியன் வெள்ளியாகும்.
ஆண்டு அடிப்படையில் இதே காலகட்டத்தில் வருவாய் ஐந்து விழுக்காடு கூடி $363.2 மில்லியன் வெள்ளியை எட்டியது. புதிதாகத் திறக்கப்பட்ட ஐந்து பேரங்காடிகள் இதற்கு முக்கிய காரணம் என்று ஷெங் சியோங் குறிப்பிட்டது.
ஷெங் சியோங்கின் தலைமை நிர்வாக அதிகாரியான லிம் ஹோக் சீ, சில்லறை வர்த்தகம் மந்தமாக இருந்தாலும் 2024ஆம் ஆண்டின் எஞ்சிய பகுதியில் முன்னேற்றத்தைக் காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“அமெரிக்காவின் வட்டி விகிதக் குறைப்பு, உள்நாட்டு வட்டி விகிதங்களைக் குறைக்க வாய்ப்புள்ளது, இது, குறைந்த அடமானச் செலவுகளின் பின்னணியில் குடும்ப வரவு செலவுத் திட்டத்திற்கு நிவாரணம் அளிக்கும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சிங்கப்பூர் பேரங்காடிகளின் துறை அதிக நடைமுறைச் செலவுகளை எதிர்பார்க்கும் வேளையில் பிரதான போட்டித் திறனை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி, வெளிப்புற தடங்கலைத் தாங்கக்கூடிய வகையில் விநியோகச் சங்கிலி பரவலாக்கப்படும் என்று திரு லிம் சொன்னார்.
“அதே சமயத்தில் விற்பனையை மேலும் மேம்படுத்துவோம். வாடிக்கையாளர்களுக்கு உயர்தர பொருள்களை போட்டித் திறன்மிக்க விலையில் வழங்க சிறந்த விநியோகிப்பாளர்களுடன் சேர்ந்து தொடர்ந்து செயல்படுவோம்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
வருவாய் கூடியதால் ஆண்டு அடிப்படையில் ஷெங் சியோங் பேரங்காடிகளின் ஒட்டுமொத்த லாபம் 3வது காலாண்டில் 8.4 விழுக்காடு அதிகரித்து $113.8 மில்லியனாக உள்ளது.
ஒரு பங்குக்கான வருவாய் 2.6 காசாகும். இது, ஓராண்டுக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 12.6 விழுக்காடு உயர்வாகும்.

