சமூகத்தை மேம்படுத்தும் இளந்திறனாளர்களைச் சிறப்பித்த சிண்டா

2 mins read
b509de10-91b3-49e7-b7ae-39e59108d4dc
சிண்டாவின் 11வது வருடாந்தர ‘இளையர் விருது‘ விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற கலாசார, சமூக இளையர்துறை அமைச்சு மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவாவிற்கு நினைவுப்பரிசு வழங்கிச் சிறப்பித்தார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன். - படம்:சிண்டா
multi-img1 of 3

தானும் சாதித்து, சமூகத்திற்கும் தனித்துவமிக்க பங்களித்துவரும் இளையர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்தது சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கம் (சிண்டா).

சிண்டாவின் 11வது வருடாந்தர ‘இளையர் விருது விழா’ சனிக்கிழமை (அக்டோபர் 26) பிற்பகல் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இளையர் நலன் சார்ந்த சிண்டாவின் பல்வேறு திட்டங்களில் அர்ப்பணிப்புடன் திறம்பட பங்காற்றிய 150 இளையர்களுக்கு ‘சிண்டா இளையர் விருதுகள்’ வழங்கப்பட்டன.

விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற கலாசார, சமூக இளையர்துறை அமைச்சு மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, இளையர்கள் பெற்றுக்கொண்ட விருதுகள் மீள்திறன் மற்றும் தனித்துவத்துடன் விளங்க அவர்கள் கொண்டுள்ள கடப்பாட்டிற்கான அங்கீகாரம் எனக் குறிப்பிட்டார்.

இளையர் நலனுக்கு வளம் சேர்க்கும் சிண்டாவின் திட்டங்கள் குறித்து உரையாற்றிய திரு சுவா, “ஒவ்வொருவரும் தங்களது ஆர்வத்தை நோக்கி விரைந்திடும் அதே வேளையில், ஒவ்வொருவருக்கும் சமுதாயத்தில் அர்த்தமிகு பங்கு உள்ளது என்பதை உணர்ந்தவர்களாய் ஒன்றுபட்ட தேசமாக முன்னேறுவோம்,” என்றும் கூறினார்.

இளையர் விருது கடந்துவந்த பாதை குறித்து தமிழ் முரசிடம் பேசிய சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், இளையர்கள் சாதித்திட அவர்கள் ஒவ்வொருவரும் வெற்றியாளர் எனும் உந்துசக்தியை அளிக்கும் வகையில் சிண்டாவின் இளையர் திட்டங்கள் செயலாக்கம் காண்கின்றன என்றார்.

“வாழ்க்கைத் திறன்களுடன், வாழ்வின் ஆதாரமான விழுமியங்களையும் இளையர்களுக்குக் கற்றுத்தரும்போது வெற்றி நிறைந்த வாழ்க்கைப் பயணம் அவர்களுடையதாகும்.

“இளையர்களைச் சிறந்த சேவையாளர்களாக உருவாக்க இலக்கு கொள்ளும்போது அந்தச் சேவையாளருக்குள் சிறந்த மனிதரும் திறன்மிகு தலைவரும் சேர்ந்தே உருவாகுவார்,” என்று நம்பிக்கை தெரிவித்தார் திரு அன்பரசு.

சிண்டா இளையர் விருது பெற்ற குமாரி கெஜ ஷ்ரையா இராஜ்குமார், 21, “சிண்டாவில் இணைந்து சேவையாற்றத் தொடங்கியபோது விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. எனினும், அந்தச் செயல்கள் பிறர் வாழ்வில் அளிக்கும் மகிழ்வை அவர்கள் எங்களிடம் பகிர்ந்துகொள்ளும்போது அதன் தாக்கத்தை உணர்வது மிகச் சிறந்த தருணமாக அமைந்திருக்கிறது. இவ்விருது நல்லதோர் ஊக்குவிப்பு,” என்று சொன்னார்.

“கல்வி ஒருபுறம், பணி மறுபுறம் என்றிருந்தாலும் சமூகத்தில் ஆக்கவழியில் மாற்றம் ஏற்படுத்த உதவும் தொண்டூழியங்கள் புரிய நேரம் ஒதுக்குவதைத் தவிர்ப்பதே இல்லை”, என்றார் இளையர் விருது பெற்ற குமாரி சரணிஷா சரவணன், 22.

இளையர் விருது சிறந்த அங்கீகாரம் என்ற சரணிஷா, “இளையர்கள் தங்களின் நண்பர்களையும் சேவையாற்ற அழைத்து வரவேண்டும். நண்பர்களுடன் சேர்ந்து தொண்டூழியத்தில் ஈடுபடுகையில் கிடைக்கும் களிப்பும் உற்சாகமும் வேறெதற்கும் ஈடாகாது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்