தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நங்கூரங்களை நிலைநிறுத்த முடியாததே கப்பல் விபத்துக்குக் காரணம்

2 mins read
bf49243c-fe0e-4c00-96de-e07a17defab5
நெதர்லாந்தைச் சேர்ந்த தூர்வாரும் கப்பலான ‘வோக்ஸ் மாக்சிமா’. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நெதர்லாந்தைச் சேர்ந்த ‘வோக்ஸ் மாக்சிமா’ என்ற தூர்வாரும் கப்பலின் நங்கூரங்களை நிலைநிறுத்த முடியவில்லை. இதனால் கப்பல் மற்றொரு கப்பலுடன் மோதியது.

இது கடந்த பத்தாண்டுகளில் மிக மோசமான எண்ணெய்க் கசிவுக்கு வழிவகுத்தது என்று புலனாய்வுகள் கண்டறிந்துள்ளன.

போக்குவரத்து பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு, ஆகஸ்ட் 15 அன்று வெளியிட்டு, ஆகஸ்ட் 21 அன்று அதன் இணையப்பக்கத்தில் பதிவேற்றிய விசாரணை அறிக்கையில், அடையாளம் காணப்பட்ட பிற காரணங்களில் முறையான ஒப்படைப்பு செயல்முறைகள் இல்லாதது மற்றும் பணி-பதிவு முறை இல்லாதது ஆகியவையும் அடங்கும்.

2024 ஜூன் 14ஆம் தேதி ‘வோக்ஸ் மாக்சிமா’ இயந்திரம் மற்றும் திசை மாற்றுக் கருவி கட்டுப்பாட்டை இழந்து, பாசிர் பாஞ்சாங் முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிங்கப்பூரைச் சேர்ந்த எண்ணெய்க் கப்பலான ‘மரின் ஹானர்’ மீது மோதியது.

இதன் காரணமாக, 400 டன் எண்ணெய் கடலில் கசிந்து, ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, லாப்ரடோர் இயற்கை வனப்பகுதி, கெப்பல் விரிகுடா, தெற்குத் தீவுகள், செந்தோசா கடற்கரைகளில் கறை படிந்தது.

சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம், தேசிய பூங்காக் கழகம், தேசிய சுற்றுப்புற வாரியம், செந்தோசா வளர்ச்சிக் கழகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த தூய்மைப்படுத்தும் பணிகள் முடிவடைய இரண்டு மாதங்களுக்கும் மேலாகின.

கடந்த ஆண்டு, ஜூன் மாதம் 14ஆம் தேதியன்று காலை, வோக்ஸ் மாக்சிமாவின் சிப்பந்திகள், உபகரணங்களை ஆய்வு செய்வதற்காக கப்பலின் வலதுபுறத்தில் உள்ள மின்சுற்று துண்டிப்பான்களைத் திறந்ததாக புலனாய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், பிற்பகல் 1.58 மணிக்கு துவாசில் உள்ள எஸ்டி மரின் கப்பற்பட்டறைக்கு வோக்ஸ் மாக்சிமா செந்தோசாவிற்கு அருகிலுள்ள மேற்கு கடற்பகுதியின் கப்பல் நிறுத்தும் இடத்திலிருந்து புறப்படத் தயாரானது.

அப்போது, ​​இரண்டு மின்சுற்று துண்டிப்பான்களிலும் மின்சார ஓட்டத்தை மீண்டும் தொடங்க அவர்களால் முடியவில்லை.

பிற்பகல் 2.16 மணிக்கு, வோக்ஸ் மாக்சிமா மரின் ஹானர் மீது மோதி, அதில் இருந்த எண்ணெய்த் தொட்டிகளில் ஒன்றை உடைத்தது.

ஏப்ரல் 2, 2025 அன்று, வோக்ஸ் மாக்சிமாவில் இருந்த நான்கு டச்சு கடலோடிகளுக்குத் தங்கள் கடமைகளை முறையாகச் செய்யத் தவறியதற்காக தலா $20,000 முதல் $40,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.

பணியாளர்களின் நினைவாற்றலை மட்டும் நம்புவதை விட, தங்கள் கடமைகளை முறையாக நிறைவேற்றுவதே ஒரு சிறந்த வழி என்று புலனாய்வுப் பிரிவு மேலும் கூறியது.

வோக்ஸ் மாக்சிமா கப்பலின் நங்கூரங்களில் அவசரகால தயார்நிலை இல்லாததையும் புலனாய்வுப் பிரிவு ஒரு காரணமாகத் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியது.

குறிப்புச் சொற்கள்