இணைய வர்த்தகத் தளமான ஷாப்பியும் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் இணைந்து மலேசியாவிலும் தாய்லாந்திலும் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.
சிங்கப்பூர் நிறுவனங்கள் ஷாப்பியின் மலேசிய, தாய்லாந்துச் சந்தைகளில் எவ்விதக் கூடுதல் கட்டணமுமின்றிப் பொருள்களை விற்கவும் விளம்பரம் செய்யவும் ஷாப்பி அனைத்துலகத் தளம் (SIP) உதவுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் இதற்கான முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை ஏறக்குறைய 8,000 விற்பனையாளர்கள் இதில் இணைந்துள்ளனர்.
இதில் இணைந்ததன் மூலம் விற்பனையும் மொத்த விற்பனை மதிப்பும் ஏறக்குறைய எட்டு மடங்கு அதிகரித்ததாக இத்தகைய விற்பனையாளர்கள் கூறினர்.
மலேசியாவிலும், தாய்லாந்திலும் சந்தைப்படுத்துதல் முயற்சியிலும் நேரலை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஷாப்பி உதவுவதாக அவர்களில் சிலர் கூறினர்.
ஷாப்பி அனைத்துலகத் தளம், பிப்ரவரி 7ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது.
தொடக்க நிகழ்ச்சியில் பேசிய எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் நிர்வாக இயக்குநர் சிண்டி கூ, இத்திட்டத்தின் வாயிலாகச் சிங்கப்பூர் விற்பனையாளர்கள் அவர்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கூடுதல் வளங்களுக்கான தேவையின்றி வெளிநாட்டுச் சந்தை அனுபவத்தைப் பெறவும் இடையூறுகளற்ற எல்லை கடந்த தளவாடச் சேவை, வாடிக்கையாளர் சேவை, கட்டணத் தீர்வுகளைப் பெறவும் முடியும் என்றார்.
இந்த ஆண்டின் பிற்பாதியில் பிலிப்பீன்சும் இத்திட்டத்தில் சேரும் என்று கூறப்பட்டது.