புதிய மேம்பாடுகளுக்கு வழிவிடும் ஹார்பர்ஃபிரண்ட் சென்டர் கடைத்தொகுதியில் உரிமையாளர்கள் பலர் தங்கள் கடைகளைக் காலி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜூன் 25ஆம் தேதி நிலவரப்படி ஒருசில கடைகள் ஏற்கெனவே காலியாகிவிட்டதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டது.
ஜூலை 27ஆம் தேதியுடன் ஹார்பர்ஃபிரண்ட் சென்டர், மறுமேம்பாட்டுக்காக அதன் கதவுகளை நிரந்தரமாக மூடுகிறது. அதே இடத்தில் அலுவலகங்களும் சில்லறை வர்த்தகக் கடைகளும் கொண்ட 33 மாடிக் கட்டடம் உருவாக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைத்தொகுதி வளாகத்தில் செயல்பட்டுவந்த சிங்கப்பூர் சொகுசுக் கப்பல் நிலையமும் ஜூலை 15ஆம் தேதியிலிருந்து 5 ஹார்பர்ஃபிரண்ட் அவென்யூவிற்கு அதன் செயல்பாடுகளை மாற்றுகிறது.
இதற்கிடையே, ஹார்பர்ஃபிரண்ட் சென்டர் சரியான நேரத்தில்தான் மூடப்படுவதாக நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியின் வர்த்தக நிர்வாகப் பள்ளியின் விரிவுரையாளர் ஜேம்ஸ் சிம் சொன்னார்.
சிங்கப்பூரில் உள்ள பிற கடைத்தொகுதிகளுடன் ஒப்புநோக்க, அங்குள்ள கடைகள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.
சிங்கப்பூரின் கிரேட்டர் சதர்ன் வாட்டர்ஃபிரண்ட் வட்டாரத்தில் அமைந்துள்ளது ஹார்பர்ஃபிரண்ட் சென்டர். எதிர்காலத்தில் அங்கு அமையவிருக்கும் மறுமேம்பாடு செய்யப்பட்ட புதிய வளாகத்தின் மதிப்பு இன்னும் பன்மடங்கு கூடுவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றார் சிம்.
இந்நிலையில், கடைத்தொகுதி மூடப்படுவதை ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
வீலாக் பிளாசா, பிளாசா சிங்கப்பூரா ஆகிய கடைத்தொகுதிகளில் கிளைகள் இருப்பதால் ஹார்பர்ஃபிரண்ட் சென்டரில் உள்ள கடை மூடப்படுவதால் பெரிய பாதிப்பில்லை என்றார் மை கிரேட்டஸ்ட் சைல்ட் என்ற கடையின் ஊழியர் சுவா.
வேறு சிலர், புதிய கட்டடத்தில் வாடகை அதிகமாக இருக்கும் என்பதால் தங்கள் கடையை அங்குக் கொண்டு வரப்போவதில்லை என்று குறிப்பிட்டனர்.
மாறாக, வேறு இடத்திற்குத் தங்கள் கடையை மாற்றிக் கொள்ள அவர்கள் திட்டமிடுவதாகக் குறிப்பிட்டனர்.
ஹார்பர்ஃபிரண்ட் சென்டரில் உள்ள படகுச் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சிலர் அது இடம் மாறுவது சற்று வருத்தமளிப்பதாகத் தெரிவித்தனர்.

