சிங்கப்பூரில் ‘வீவோ’, ‘ஓப்போ’, ‘ரெட்மி’ உள்ளிட்ட திறன்பேசிகளின் வரத்து குறைந்து விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
லிட்டில் இந்தியா வட்டாரத்தில் அதிக அளவில் வாங்கப்படும் இத்திறன்பேசிகளின் வரத்து பாதிக்கப்பட்டிருப்பது தங்கள் வணிகத்தில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளதாகச் சில்லறை வர்த்தகர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
பயனீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள முன்னணிச் சீனத் தயாரிப்புத் திறன்பேசிகளின் விலை உயர்வுக்கு உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள மாற்றம் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
“எங்கள் கடைகளில் 100 வெள்ளி, 200 வெள்ளி விலையில் வரும் 5ஜி திறன்பேசிகள் அதிகமாக விற்பனையாகும். அதன் விலை திடீரெனக் கணிசமாக உயர்ந்துள்ளதைக் காணமுடிகிறது. இது எங்கள் வர்த்தகத்தைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது,” என்றார் ‘கிராண்ட் மொபைல்ஸ்’ கடையின் வர்த்தக மேலாளர் வீர சேகரன்.
தங்கள் கடையில் அதிகம் விற்பனையாகும் ‘விவோ’ நிறுவனத்தின் ‘ஒய் 11’ வரத்து முற்றிலும் குறைந்துள்ளதை அவர் சுட்டினார். “அப்படியே கிடைத்தாலும், 200 வெள்ளிக்கு விற்கப்படும் அத்திறன்பேசியின் விலை மே 1ஆம் தேதிமுதல் 269 வெள்ளியாக அதிகரிக்கும்,” என்றார் அவர்.
தற்போதுவரை 8 ஜிபி ‘ரேம்’ கொண்ட திறன்பேசி 200 வெள்ளிக்கு கிடைத்துவந்த நிலையில், 4 ஜிபி ‘ரேம்’ மட்டுமே கொண்ட திறன்பேசியை 250 வெள்ளி கொடுத்து வாங்கும் நிலை ஏற்படுமென அவர் சொன்னார்.
விலையேற்றக் காரணிகள்
இதற்கு இரு முக்கியக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதல் காரணம் பகுதிமின்கடத்தி சில்லுகளின் (சிப்) விலை உயர்வு.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வருகையினால், பெரிய சில்லுத் தயாரிப்பு நிறுவனங்கள், சாதாரண திறன்பேசிச் சில்லுகளைவிடச் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கான சில்லுகளைத் தயாரிப்பதில் அதிகக் கவனம் செலுத்துகின்றன. அதனால், சாதாரண கைப்பேசிகளுக்கான சில்லுகளின் விநியோகம் குறைந்து, அவற்றின் விலை அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சில்லுகளின் விலையேற்றம் முக்கியக் காரணம் என்றனர் யுனிவெர்சல் கடையைச் சேர்ந்தோர்.
ஏறத்தாழ அனைத்துத் திறன்பேசிகளிலும் புகைப்படங்கள் திருத்தம், நேரடி மொழிபெயர்ப்பு உள்ளிட்ட அதிநவீன ‘ஏஐ’ அம்சங்கள் புகுத்தப்படுகின்றன. இதற்கு அதிகப்படியான ‘ரேம்’ தேவைப்படுகிறது. சில்லுகளின் விலை ஒருபுறம் உயர, மறுபுறம் திறன்பேசிகளுக்குத் தேவையான சில்லுகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால், உற்பத்திச் செலவு உயர்கிறது.
இது, ‘மெம்ஃப்லேஷன்’ (Memflation) எனும் புதிய பொருளாதாரச் சிக்கல் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறியுள்ளனர். மார்ச் மாதம் உலகளாவிய ‘சிப்’, ‘சேமிப்புத் தொழில்நுட்பச் செலவுகள்’ (Storage costs) அதிகரித்ததால் விலைகளை உயர்த்துவதாக விவோ, ஓப்போ நிறுவனங்கள் தெரிவித்தன.
உலகளாவிய எரிபொருள் விலையேற்றமும், அதனால் ஏற்படும் போக்குவரத்துச் செலவுச் சுமையும் இதற்குக் கூடுதல் வலுச்சேர்த்துள்ளன.
லிட்டில் இந்தியா திறன்பேசி வர்த்தக பாதிப்பு
சாம்சங் போன்ற பெறுநிறுவனத் திறன்பேசிகளில் இம்மாற்றங்கள் பெரிதாக எதிரொலிக்கவில்லை என்று கூறிய ‘கிராண்ட் மொபைல்ஸ்’ ஊழியர் ரமேஷ் கிருஷ்ணன், ஆனால் அவை தங்கள் கடையில் அதிகம் விற்பனையாவதில்லை என்றார்.
“சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப்பயணிகள் அதிகம் வந்துபோகும் இடம் லிட்டில் இந்தியா. அவர்களில் பலரும் திறன்பேசிகள் வாங்குவது வழக்கம். விலை ஏறினால் அதுவும் குறையும்,” என்றார் வீர சேகரன். தங்கள் கடையில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டு விற்பனை குறைந்துள்ளதை அவர் சுட்டினார்.
சில்லறை வர்த்தகர்களுக்கு வரத்து குறைந்ததோடு, உள்ளூர் விநியோகர்களிடம் இருப்பு குறைந்துள்ளதாகவும் அனைத்துக் கடையினரும் தெரிவித்தனர்.
“சில்லறை வர்த்தகர்கள் பலருக்கும் மாதாந்தரக் கட்டாயச் செலவுகள் உள்ளன. அன்றாட விற்பனை எண்ணிக்கையை நம்பித் தொழில் நடத்தும் அனைத்து வணிகர்களுக்கும் வாடகை, ஊழியர் சம்பளம் போன்ற செலவுகளைக் சமாளிப்பதில் சிரமம் ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளது,” என்று ‘யுனிவெர்சல் மொபைல்ஸ்’ பொறுப்பாளர் தெரிவித்தார்.
இவ்விலையேற்றம் ஊழியர் சம்பளத்தைப் பாதித்து, ஆட்குறைப்புகூட ஏற்படுமோ எனும் அச்சம் எழுந்துள்ளதாகக் கூறினார் ஊழியர் சிவப்பழம் ஆறுமுகச்சாமி, 36.
“லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள கடைகளுக்குத் திறன்பேசிகள் வாங்க வரும் பலரும் கட்டுப்படியான விலையில், தரமான திறன்பேசிகளை எதிர்பார்த்து வருவார்கள். அதுவே பாதிப்படைந்திருப்பது என்பது சிரமமான நிலைதான்,” என்றார் ‘ராஜ் மொபைல்ஸ்’ கடையின் உரிமையாளர் நடராஜன்.
இவ்விலையேற்றத்தின் காரணத்தை மக்களுக்கு விளக்கிச் சொல்வதில் சிரமம் இருப்பதாக நடராஜன் கூறினார்.
ஒரே மாதிரியான தொழில்நுட்பம் கொண்ட வெவ்வேறு நிறுவனத் திறன்பேசிகளை மக்களுக்குப் பரிந்துரைக்கத் தொடங்கியுள்ளதாக வீர சேகரன் சொன்னார்.
சிங்கப்பூரில் ‘வீவோ’ திறன்பேசிகளை விநியோகிக்கும் ஒருவர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை), “இது, உலகப் பொருளியல் ஏற்படுத்தும் தாக்கத்தின் விளைவு என்பதால் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. தற்போது வரத்தைவிட தேவை அதிகமாக இருக்கிறது. விலை அதிகரித்துள்ளதும் உண்மைதான். இது சிங்கப்பூரில் திறன்பேசி வணிகக் கட்டமைப்பை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,” என்றார்.
கடந்த மாதம் தமது நண்பர் 300 வெள்ளி விலையில் வாங்கிய ‘ஓப்போ’ திறன்பேசியைத் தாமும் வாங்க எண்ணிய ஓட்டுநரான வீரப்பனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
“அந்தத் திறன்பேசி இல்லை என்றும் அதே தொழில்நுட்பத்தில் உள்ள பிற நிறுவனத் திறன்பேசிகளின் விலை உயர்ந்துள்ளது என்றும் கடைக்காரர்கள் கூறுகின்றனர். பொதுவாக, புதிய திறன்பேசிகள் வரும்போது முந்தைய தொழில்நுட்பம் கொண்டவற்றின் விலை குறையும். திறன்பேசி விலை உயர்வை முதன்முறையாகச் சந்திக்கிறேன். வியப்பாக உள்ளது,” என்றார் அவர்.
கிட்டத்தட்ட ஓராண்டுக்குப்பின் இந்தியாவுக்குச் செல்லும் வெளிநாட்டு ஊழியர் தங்கராஜ் கலப்பையன், 44, தமது மனைவிக்கு ‘வீவோ’ திறன்பேசி ஒன்றை வாங்கினார்.
“நான் 150 வெள்ளி விலையில் 5 ஜி திறன்பேசி வாங்க வந்தேன். ஆனால், 199 வெள்ளிக்கு வாங்கியுள்ளேன். என்னைப் போன்ற பலரும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இத்திறன்பேசிகளை வாங்கிச் செல்வது வழக்கம். இந்த விலை உயர்வு அனைத்தையும் பாதிக்கும்,” என்று தங்கராஜ் கூறினார்.

