சுருங்கிவரும் கூட்டுரிமை வீடுகளின் பரப்பளவு

2 mins read
1f101fc9-a306-42a9-82e3-8b1b1bf000cd
புதிய கூட்டுரிமை வீட்டுத் திட்டத்துக்கான காட்சியகத்தில் மக்கள். - கோப்புப் படம்: சிம் லியேன் குழுமம்

சிங்கப்பூரில் கூட்டுரிமை வீடுகளின் பரப்பளவு கடந்த 15 ஆண்டுகளில் சுருங்கி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு வாங்கக் கடன் பெறுவதற்கான கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட்டது, சொத்துச் சந்தையைத் தணிக்கும் நடவடிக்கைகள் பலமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது, சமூகத்தினரிடையே மாறிவரும் தேவைகள் ஆகிய அம்சங்களைக் கருத்தில்கொண்டு சொத்து மேம்பாட்டாளர்கள் சிறிய வீடுகளைக் கட்டுவதில் கவனம் செலுத்துவதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

வீட்டு விலையைக் கட்டுப்படியாக இருக்கச் செய்யும் நோக்கில் சொத்து மேம்பாட்டாளர்கள் சிறிய வீடுகளைக் கட்டுவதாக கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 2010லிருந்து 2024ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தனியார் வீட்டு விலை 76.9 விழுக்காடு கூடியுள்ளது அதற்குக் காரணம். அதனால் ஒரு வீட்டின் சதுர அடி விலையும் கூடியுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு தரை வீடு அல்லாத ஒரு புதிய கூட்டுரிமை வீட்டின் பரப்பளவு சராசரியாக 1,012 சதுர அடியாக இருந்தது. சென்ற ஆண்டு அது 10.6 விழுக்காடு குறைந்து 904 சதுர அடியாகப் பதிவானதென கு‌ஷ்மன் & வேக்ஃபீல்ட் (Cushman & Wakefield) நிறுவனத்தின் புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது. அந்நிறுவனம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்குப் புள்ளி விவரங்களைச் சேகரித்துத் தந்தது.

கடந்த 2010 முதல் 2024க்கு இடைப்பட்ட காலத்தில் முக்கிய வட்டாரங்களில் கட்டப்பட்ட புதிய கூட்டுரிமை வீடுகளின் பரப்பளவு, மற்ற இடங்களில் கட்டப்பட்டவற்றின் பரப்பளவைக் காட்டிலும் வேகமாகக் குறைந்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் முக்கிய வட்டாரங்களில் கட்டப்பட்ட கூட்டுரிமை வீடுகளின் பரப்பளவு சராசரியாக 1,044 சதுர அடியிலிருந்து 20.6 விழுக்காடு சரிந்து 829 சதுர அடியாகப் பதிவானது.

அதேவேளை, நகர்ப்புறம் அல்லாத வட்டாரங்களில் கட்டப்பட்ட புதிய கூட்டுரிமை வீடுகளின் பரப்பளவு சராசரியாக 1,044 சதுர அடியிலிருந்து 13.4 விழுக்காடு குறைந்து 904 சதுர அடியாகப் பதிவானது. அதோடு, புதிய வட்டாரங்களில் கட்டப்பட்ட கூட்டுரிமை வீடுகளின் பரப்பளவு 947 சதுர அடியிலிருந்து 4.5 விழுக்காடு மட்டுமே குறைந்து 904 சதுர அடியாகப் பதிவானது.

மேலும், புதிய ‘எக்சிக்கியூட்டிவ் கொண்டோமினியம்’ வீடுகளின் பரப்பளவு மற்ற கூட்டுரிமை வீடுகளின் பரப்பளவைவிட மெதுவாகத்தான் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமையாளர்கள் பொதுவாக ‘எக்சிக்கியூட்டிவ் கொண்டோமினியம்’ வீடுகளை முதலீடு செய்வதற்காக வாங்குவதில்லை என்பது அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2010லிருந்து 2024க்கு இடைப்பட்ட காலத்தில் புதிய ‘எக்சிக்கியூட்டிவ் கொண்டோமினியம்’ வீடுகளின் பரப்பளவு 8.1 விழுக்காடு குறைந்து 980 சதுர அடியாகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்