வரும் 2026ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானங்கள் மூலமாக நீண்ட தொலைவு செல்வோர் மிகுந்த சௌகரியமாகப் பயணம் செய்யலாம்.
எஸ்ஐஏ நிறுவனம், தனது 41 ஏர்பஸ் ஏ350 விமானங்களை $1.1 பில்லியன் செலவில் புதுப்பிக்க இருப்பதே இதற்குக் காரணம்.
புதிய வடிவமைப்புடன் கூடிய இருக்கைகள் உள்ளிட்ட அந்த மேம்பாடுகளை எஸ்ஐஏ பொறியியல் நிறுவனம் மேற்கொள்ளும் என்று திங்கட்கிழமை (நவம்பர் 4) ஓர் அறிக்கை வழியாக அந்த விமான நிறுவனம் தெரிவித்தது.
அந்தப் புதுப்பிப்புப் பணிகள் முடிய ஆறு ஆண்டுகளாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 2030 இறுதிவாக்கில் அப்பணிகள் நிறைவுபெறலாம்.
எஸ்ஐஏ நிறுவனத்தின் 34 ஏ350-900 நீண்ட தொலைவு விமானங்களும் முற்றிலும் புதுப்பிக்கப்படும். அவற்றுள் முதலாவது விமானம், 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சேவையாற்றத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்விமானங்களில் புதிய இக்கானமி, பிரீமியம் இக்கானமி, பிஸ்னஸ் வகுப்பு இருக்கைகள் பொருத்தப்படும்.
புதுப்பிப்பிற்குப்பின் அவ்வகை விமானம் ஒன்றில் 42 பிஸ்னஸ், 24 பிரீமியம் இக்கானமி, 192 இக்கானமி வகுப்பு இருக்கைகள் இருக்கும்.
அதேபோல, எஸ்ஐஏ நிறுவனத்தின் ஏழு ஏ350-900 மிக நீண்ட தொலைவு விமானங்களும் புதுப்பிக்கப்படும். அவற்றுள் முதலாவது விமானம், 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வானில் பறக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், அந்த ஏழு விமானங்களில் புதிய முதல் வகுப்பு இருக்கைகளும் பொருத்தப்படும். புதுப்பிப்பிற்குப்பின் அவ்வகை விமானம் ஒன்றில் நான்கு முதல் வகுப்பு, 70 பிஸ்னஸ், 58 பிரீமியம் இக்கானமி வகுப்பு இருக்கைகள் இருக்கும்.
இந்த மேம்பாடு குறித்த முழுமையான விவரங்கள் 2026ஆம் ஆண்டை ஒட்டி அறிவிக்கப்படும்.
ஒரு விமானத்தைப் புதுப்பிக்க கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகும் என்றும் அப்பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
“எங்களது நீண்டகால உத்தியின் அடிப்படையில் ஏர்பஸ் ஏ350-900 விமானங்கள் புதுப்பிக்கப்படவுள்ளன. புதிய அடுத்த தலைமுறை இருக்கைகள், நீண்ட தொலைவு செல்ல எங்கள் விமானங்களைப் பயன்படுத்துவோருக்கான பயண அனுபவத்தை இன்னும் சிறப்பானதாக்கும்,” என்று எஸ்ஐஏ பேச்சாளர் தெரிவித்தார்.
இதனிடையே, போயிங் நிறுவனத்திடமிருந்து அடுத்த தலைமுறை 777-9 விமானங்களை எஸ்ஐஏ வாங்கவிருக்கிறது. ஆயினும், திட்டமிட்டதற்கு ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2026ஆம் ஆண்டில்தான் அவற்றை வழங்க முடியும் என போயிங் நிறுவனம் கடந்த அக்டோபரில் கூறியிருந்தது. இந்நிலையில், அவ்விமானங்களை வழங்கும் கால அட்டவணை தொடர்பில் போயிங்குடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக எஸ்ஐஏ தெரிவித்துள்ளது.