சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்துக்கும் இடையே, இடைநில்லா பயணிகள் விமானச் சேவை வழங்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), கத்தே பசிபிக் விமான நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மேனியா முதலமைச்சர் ஜெரிமி ராக்லிஃப் திங்கட்கிழமையன்று (நவம்பர் 18) இத்தகவலை வெளியிட்டார். ஆசியாவிலிருந்து டாஸ்மேனியத் தலைநகர் ஹொபார்ட்டுக்கு நேரடி விமானச் சேவைகளை வழங்க அம்மாநில அரசாங்கம், எஸ்ஐஏ, ஹாங்காங்கின் கத்தே பசிபிக் ஆகிய விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“இவை உலகளவில் முன்னணி விமான நிறுவனங்களாகும். அவை ஹொபார்ட்டுக்கு நேரடிச் சேவைகளை வழங்குவது எங்கள் விருப்பம்,” என்று பல்ஸ் டாஸ்மேனியா (Pulse Tasmania) ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் திரு ரொக்கிலிஃப் சொன்னார். இச்செய்தியை அவர் தமது சமூக ஊடகப் பக்கங்களிலும் பகிர்ந்துகொண்டார்.