சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம், ஏதர் ஃபியூல்ஸ் நிறுவனத்தின் சிங்கப்பூர் ஆலையிலிருந்து 2028ஆம் ஆண்டிலிருந்து அடுத்த மூன்றாண்டுகளுக்கு 4,800 டன் வரையிலான அடுத்த தலைமுறை நிலைத்தன்மை மிக்க விமான எரிபொருளை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
இதன் மூலம், புக்கோம் தீவில் உள்ள ஆஸ்டர் சுத்திகரிப்பு வளாகத்தில் ஏதர் ஃபியூல்ஸ் நிறுவனம் உருவாக்கி வரும் ‘புரோஜெக்ட் பீக்கன்’ திட்டத்தின்கீழ் நிலைத்தன்மை மிக்க விமான எரிபொருளை வாங்கும் முதல் விமான நிறுவனம் என்ற சிறப்பை எஸ்ஐஏ பெற்றுள்ளது.
அக்டோபர் 23ஆம் தேதி இதற்கான அதிகாரபூர்வ ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தத் திட்டத்தின்கீழ் உயிர் மீத்தேன், தொழில்துறைக் கழிவு வாயுக்கள் போன்ற மூலப்பொருள்களைப் பயன்படுத்தி நிலைத்தன்மை மிக்க விமான எரிபொருள் தயாரிக்கப்படும்.
கழிவுக் கரிம மூலப்பொருள்களை விமான எரிபொருளாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் நிலைத்தன்மை மிக்க எரிபொருளை எஸ்ஐஏ நிறுவனம் வாங்குவது இதுவே முதன்முறை.
கட்டுப்படுத்தப்பட்ட கொழுப்பு சார்ந்த மூலப்பொருள்களை நம்பியிருக்கும் பழைய முறைகளுக்கு இது சிறந்த மாற்றாக அமைகிறது. 2025ஆம் ஆண்டில் இரு நிறுவனங்களுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.
சிங்கப்பூர், உலகளாவிய விமானப் போக்குவரத்து நடுவமாகத் திகழ்வதுடன், விமானத் துறையில் கரிம வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான வலுவான சூழலை உருவாக்கி வருவதாக ஏதர் ஃபியூல்ஸ் தலைமை நிர்வாகி கோனர் மேடிகன் தெரிவித்தார்.
2050ஆம் ஆண்டுக்குள் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயுக்களின் வெளியேற்றத்துக்கும் கரிம நீக்கத்துக்கும் இடையிலான சமநிலையைப் பேண எஸ்ஐஏ இலக்கு நிர்ணயித்துள்ளது. நிலைத்தன்மை மிக்க விமான எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பதும் அதன் எதிர்கால விநியோகத்தை உறுதிசெய்வதும் அந்த இலக்கை அடைய மிகவும் முக்கியம் என நிறுவனத்தின் நீடித்த நிலைத்தன்மைக்கான தலைமை அதிகாரி லீ வென் ஃபென் கூறினார்.
