புதுடெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம், நிறுத்தப்பட்ட பின்னர் திடீரென பின்னோக்கி நகர்ந்ததில், விமானப் பணிபெண் ஒருவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது.
வேறு எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. பயணிகள் அனைவரும் வழக்கம்போல சாதாரணமாக விமானத்திலிருந்து வெளியேறினர் என்று விமான நிறுவனம் தெரிவித்தது.
அந்த ஏர்பஸ் ஏ380 விமானத்தில் மொத்தம் 459 பயணிகளும் 25 ஊழியர்களும் இருந்தனர். சிங்கப்பூரிலிருந்து புதுடெல்லிக்குச் சென்ற எஸ்கியூ406 விமானம் இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்தபோது சம்பவம் நிகழ்ந்தது.
“விமானி உடனடியாக ‘பிரேக்’ போட்டு விமானத்தைத் தடுத்து நிறுத்தினார். விமானம் நிறுத்தப்பட்டதும், விமானிகள் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தரைத்தள ஊழியர்கள் விமானத்தை பாதுகாப்பாக அதற்காக ஒதுக்கப்பட்ட நிறுத்துமிடத்துக்குக் கொண்டு சென்றனர்,” என்று எஸ்ஐஏ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
காயமடைந்த விமானப் பணிப்பெண் மருத்துவச் சேவை பெற்றதாகவும், அவரது கடமைகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
சம்பவத்திற்கான காரணத்தை எஸ்ஐஏ விசாரித்து வருகிறது. “வாடிக்கையாளர்கள், பணிக் குழுவினரின் பாதுகாப்பு எப்போதும் எங்கள் தலையாய முன்னுரிமை,” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.


