தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஸ்ஐஏ விமானத்தில் கோளாறு: ஹாங்காங்கில் நான்கு மணி நேரம் சிக்கித் தவித்த பயணிகள்

2 mins read
f00aba81-07c0-4d20-8331-a9796bba49dd
விமான சேவை ரத்து செய்யப்பட்டதாகப் பின்னர் தெரிவிக்கப்பட்டது. பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி, பயணிகள் சிங்கப்பூர் ஏர்லைன்சின் எஸ்கியூ893 விமானத்தினுள் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் சிக்கித் தவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அதற்குக் காரணம்.

அந்த விமானம் பிற்பகல் 3.40 மணிக்கு ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது.

பின்னர் அது ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இரவு 8 மணியளவில் பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

பிற்பகலில் விமானத்தில் தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் பொறியாளர்கள் சோதனைகளை நடத்துவதாகவும் விமானி அறிவித்ததாகத் திருவாட்டி டான் எனும் 59 வயதுப் பயணி கூறினார்.

தானும் சக பயணிகளும் விமானத்தினுள் அமைதியாகக் காத்திருந்ததாக அவர் சொன்னார். சிறிது நேரம் விளக்குகள் அணைந்ததாகவும் குளிரூட்டி இயங்காததால் விமானத்தினுள் வெப்பமாக உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பயணிகளுக்குப் பழச்சாறும் தண்ணீரும் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

விமானத்தினுள் காத்திருந்த பயணிகள்.
விமானத்தினுள் காத்திருந்த பயணிகள். - படம்: திருவாட்டி டான்

பின்னர் இரவு 7.30 மணிவாக்கில் விமானம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது; உடனடியாக அனைவரும் வெளியேற்றப்பட்டனர் என்று அந்தப் பயணி குறிப்பிட்டார்.

செப்டம்பர் 11ஆம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் கிளம்பிய கேத்தே பசிபிக் விமானத்தில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதாகத் திருவாட்டி டான் கூறினார்.

கேள்விகளுக்குப் பதிலளித்த எஸ்ஐஏ நிறுவனப் பேச்சாளர், எஸ்கியூ893 விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் பொறியாளர்கள் பலமுறை முயற்சி செய்தும் அதற்குத் தீர்வுகாண இயலவில்லை என்றும் கூறினார்.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை மாற்று விமானங்களில் ஏற்றிவிட எஸ்ஐஏ உதவும் என்றார் அவர்.

இச்சம்பவத்தால் ஏற்பட்ட சிரமத்திற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மன்னிப்புக் கோருவதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்