சிங்கப்பூரிலிருந்து திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4), தென்கொரியத் தலைநகர் சோலுக்குப் புறப்பட்டுச் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அது சிங்கப்பூருக்கே திரும்பியது.
‘எஸ்கியூ600’ விமானம், சாங்கி விமான நிலைய இரண்டாம் முனையத்திலிருந்து திங்கட்கிழமை காலை 8.15 மணிக்குப் புறப்பட்டதாக ‘ஃபிளைட்அவேர்’ இணையத்தளம் கூறுகிறது. காலை 9.55 மணியளவில் அந்த விமானம் சிங்கப்பூருக்குத் திரும்பியதாக அது குறிப்பிட்டது.
முன்னதாக, அந்த ‘போயிங் 787-10’ வகை விமானம், இஞ்சியோன் அனைத்துலக விமானத்தில் தென்கொரிய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்குத் (சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணி) தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் மலேசிய வான்வெளியில் நுழைந்த சிறிது நேரத்தில் தென்கிழக்குத் திசை நோக்கித் திரும்பியதாகவும் பின்னர் தென்சீனக் கடலின் மேற்புறம் வட்டமிட்டுச் சாங்கி விமான நிலையத்திற்குத் திரும்பியதாகவும் ‘ஃபிளைட்அவேர்’ இணையத்தளத் தகவல்கள் கூறுகின்றன.
பயணிகள் 338 பேருடன் சிங்கப்பூரில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. மாற்று விமானத்துக்குக் காத்திருந்த வேளையில் அவர்களுக்கு உணவுப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக ‘எஸ்ஐஏ’ பேச்சாளர் கூறினார்.
பிற்பகல் 12.55 மணிக்கு மாற்று விமானம் சோல் நோக்கிப் புறப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நேர்ந்த சிரமத்திற்கு நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.