பயணிகளின் அனுபவத்தை மேலும் வசதியாக மாற்றும் நோக்கில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) புதிய நீண்டதூர விமானச் சேவைகளின் உட்புற மேம்பாடுகளுக்காக $2 பில்லியனுக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளது.
புதிய மேம்பாடுகள் 2027ஆம் ஆண்டின் பிற்பாதியிலிருந்து படிப்படியாகச் சேவையில் அறிமுகம் காணும். எஸ்ஐஏ நிறுவனத்தால் மாற்றியமைக்கப்படும் 41 ‘ஏர்பஸ் ஏ350-900’ வகை விமானங்கள், புதிய ‘போயிங் 777-9’ வகை விமானங்கள் ஆகியவற்றில் இந்த மாற்றங்கள் இடம்பெறும்.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில், போக்குவரத்து அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
முதல் வகுப்பு, ‘பிஸ்னஸ்’ வகுப்பு, ‘பிரிமியம் இகானமி’, ‘இகானமி’ ஆகிய நான்கு பிரிவுகளிலுமே இந்தப் புத்தம்புது வடிவமைப்புகள் இடம்பெறுகின்றன. அனைத்துலக அளவில் 5,000க்கும் மேற்பட்ட பயணிகளிடம் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
முதல் வகுப்பில் தனிமைக்கான தள்ளுகதவுகளும் (sliding doors), நடுப்பகுதி இருக்கைகளை இணைத்து விமான உலகிலேயே ஆகப்பெரிய இரட்டைப் படுக்கையாக மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு.
பிஸ்னஸ் வகுப்பு வசதிகளிலும் கதவுகள், முழுப் படுக்கையாக மாறும் இருக்கைகள், 22 அங்குலம் வரையிலான ‘4 கே’ திரைகள் பொருத்தப்பட்டுள்ளன.
‘இகானமி’, ‘பிரிமியம் இகானமி’ பிரிவுகளில் கால்களைத் தாராளமாக நீட்டி அமர கூடுதல் இடம், பொழுதுபோக்குத் திரைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட விமானங்களில் ‘ஸ்டார்லிங்க்’ அதிவேக இணையச் சேவையும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.
விமானங்களைத் தவிர, சாங்கி விமான நிலையம் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள ‘சில்வர்கிரிஸ்’ ஓய்வறைகளைப் புதுப்பிக்கப்பட்ட எஸ்ஐஏ $130 மில்லியனுக்குமேல் முதலீடு செய்துள்ளது.
பயணிகள் தொடக்கம் முதல் இறுதி வரை மகிழ்ச்சியான அனுபவத்தைப் பெற உறுதிசெய்வதே இதன் தலையாய நோக்கம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் ஃபோங் கூறினார்.
