சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் இலவச, வரம்பில்லா 'வைஃபை' சேவை

2 mins read
9f2e080c-274b-4112-afac-69635a510c33
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனத்தின் 'கிரிஸ்ஃபிளையர்' உறுப்பினர்களாக இருப்போர், அதன் விமானங்களில் இக்கானமி, பிரிமியம் இக்கானமி வகுப்புகளில் பயணம் செய்யும்போது வரம்பற்ற 'வைஃபை' இணைய சேவையை இலவசமாகப் பெறுவர்.

இந்த வசதி வரும் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் நடப்பிற்கு வரவுள்ளது.

தன் பயணிகள் விமானங்களில் பயணம் செய்யும்போது அந்த அனுபவத்தை மேம்படுத்துவதற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எடுத்துவரும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் ஃபோங் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜனவரி மாதத்திலிருந்து தனது 'சுவிட்', முதல் வகுப்பு, 'பிஸ்னஸ்' வகுப்பு, முன்னுரிமைப் பயணிகள் சேவை (பிபிஎஸ்) உறுப்பினர்கள் ஆகிய பயணிகளுக்கு விமானப் பயணத்தின்போது இலவச, வரம்பற்ற 'வைஃபை' சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வழங்கி வருகிறது.

இக்கானமி, பிரிமியம் இக்கானமி வகுப்பைச் சேர்ந்த கிரிஸ்ஃபிளையர் உறுப்பினர் பயணிகளுக்கு முறையே இப்போது விமானத்தினுள் இரண்டு மணி நேரமும் மூன்று மணி நேரமும் இலவச 'வைஃபை' சேவை வழங்கப்பட்டு வருகின்றது.

கிரிஸ்ஃபிளையர் உறுப்பினராகப் பதிவுசெய்துகொள்ள கட்டணம் எதுவும் செலுத்த தேவை இல்லை.

முன்னதாக, மூன்றரை மணி நேரத்திற்கும் மேல் அதிகமாக இருக்கும் பயணங்களில் ஜூன் 1முதல் இக்கானமி வகுப்பு பயணிகளுக்கும் 'அப்படைசர்' எனும் பசிதூண்டும் உணவுகள் மீண்டும் வழங்கப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்திருந்தது.

மூன்றரை மணி நேரமும் அதற்கும் மேலான பயணங்களின்போது இக்கானமி வகுப்பில் பயணம் செய்வோர்க்குப் பசிதூண்டும் உணவுடன் ஒரு ரொட்டித்துண்டு, முதன்மை உணவு, பாலாடைக்கட்டி, நொறுக்குத்தீனி, இனிப்புப் பண்டம் ஆகியவையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2019-20 நிதியாண்டைக் காட்டிலும் இப்போது விமானங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவிற்காக 20 விழுக்காடு அதிகம் செலவிடப்படுகிறது என்று திரு கோ குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்