தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடுவானில் ஆட்டங்கண்ட எஸ்ஐஏ விமானம் மீண்டும் சேவைக்குத் திரும்புகிறது

1 mins read
21655095-4b86-4bb1-aba4-7dd3365e1dbd
கோப்புப்படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டு மே 21ஆம் தேதி லண்டனிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்சின் ‘எஸ்கியூ321’ விமானம் கடுமையாக ஆட்டங்கண்டது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்; பலர் காயமடைந்தனர்.

இந்த விமானம் அதன் செயல்பாட்டுச் சோதனைப் பயணத்தைச் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 23) நிறைவு செய்ததாக விமானக் கண்காணிப்பு இணையத்தளமான ‘ஃபிளைட் ரேடார்24’ தரவுகள் தெரிவிக்கின்றன.

விமானம் மீண்டும் வர்த்தகச் சேவையில் நுழையத் தயாராக உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான சோதனைகளில் இது ஒரு பகுதி எனச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

ஆட்டங்கண்ட விமானத்தில் கடுமையான பராமரிப்புப் பணிகள் மேற்கொண்ட பின்னர், இந்தச் செயல்பாட்டுச் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

விமானத்தில் உள்ள அனைத்து பாகங்களின் செயல்பாட்டை உறுதிசெய்வதற்காக இந்தச் சோதனை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டது.

இந்த விமானம் சாங்கி விமான நிலையத்திலிருந்து ஜூலை 23ஆம் தேதி பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டது என்றும் கிழக்கு நோக்கி சுமார் 400 கிலோமீட்டர் தூரம் பறந்தது என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.

பின்னர், இந்தோனீசியாவின் கலிமந்தான் அருகே உள்ள கடல் பகுதியில் பலமுறை வட்டமடித்த பிறகு, அன்று மாலை 4 மணியளவில் அவ்விமானம் சிங்கப்பூர் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்