சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம், ஆண்டு முழுவதுக்குமான சாதனை அளவு நிகர லாபத்தை புதன்கிழமை (மே 15) பதிவுசெய்தது.
அதன் அடிப்படையில் பங்குதாரர்களுக்கு அதிக ஈவுத்தொகையையும் பணியாளர்களுக்குக் கூடுதல் ஊக்கத்தொகையையும் (போனஸ்) வழங்க அந்நிறுவனம் முன்மொழிகிறது.
எஸ்ஐஏ தலைமை நிர்வாகி கோ சூன் போங், விமானிகள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 7.94 மாத போனஸ் தொகையை அறிவித்த ‘ஸ்கிரீன்ஷாட்’-ஐ தகவலறிந்த வட்டாரங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அனுப்பின.
ஒப்புநோக்க, 2023ல் பெரும்பாலான பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட 6.65 மாத போனஸ் தொகையைவிட இது அதிகம். இந்த விவகாரம் குறித்து கருத்துரைக்க எஸ்ஐஏ மறுத்துவிட்டது.
எஸ்ஐஏவுக்கு இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்த நிதியாண்டுக்கான நிகர லாபம் 24 விழுக்காடு உயர்ந்து $2.7 பில்லியனாக பதிவானது.
வருவாய் 7 விழுக்காடு கூடி சாதனை அளவாக $19 பில்லியனாக பதிவானது. பயணிகளுக்கு விமானப் பயணச்சீட்டு விற்பனை மூலம் வருவாய் 17.3 விழுக்காடு அதிகரித்து $15.7 பில்லியனாக இருந்தது.
ஆண்டு முழுவதுக்கும் விமானப் பயணத்துக்கான தேவை தொடர்ந்து லாபகரமாக இருப்பதாக எஸ்ஐஏ கூறியது. சீனா, ஹாங்காங், ஜப்பான், தைவான் அவற்றின் எல்லைகளை முழுமையாகத் திறந்துள்ளதால் வடக்கு ஆசியாவிலிருந்து பயணத் தேவை அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, எஸ்ஐஏ-வின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஸ்கூட்டில் 36.4 மில்லியன் பேர் பயணம் செய்தனர். ஆண்டு அடிப்படையில் இது 37.6 விழுக்காடு அதிகம்.