வரும் 2050ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய கரிம வெளியேற்றத்தை அடைவதற்கான இலக்கின் ஒரு பகுதியாக, சமையல் எண்ணெய், விலங்குகளின் கொழுப்பு, விவசாய கழிவுகள் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் நீடித்த நிலைத்தன்மையான விமான எரிபொருளை வாங்கவுள்ளதாகச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) புதன்கிழமை (அக்டோபர் 28) அறிவித்தது.
ஏத்தர் பீக்கன் நிறுவனத்திடமிருந்து மூன்று ஆண்டுகளில் 4,800 டன் வரை நீடித்த நிலைத்தன்மை கொண்ட விமான எரிபொருளைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் எஸ்ஐஏ கையெழுத்திட்டுள்ளது.
அதன் விநியோகம் 2028ஆம் ஆண்டில் தொடங்கும் என அவ்விரு நிறுவனங்களும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் எரிவாயு, உயிர் மீத்தேன் போன்ற கரிமப் பொருள்களை விமான எரிபொருளாக மாற்றும் புதிய தொழில்நுட்பம் மூலம் இது தயாரிக்கப்படுகிறது.
இந்த உற்பத்தி முறை வழக்கமான விமான எரிபொருளைவிட பசுமை வாயு வெளியேற்றத்தை 70 விழுக்காட்டிற்கும் மேல் குறைக்கும் எனக் கூறப்பட்டது.
புலாவ் புக்கோமில் உருவாக்கப்பட்டு வரும் ஏத்தர் ஃபியூவல்ஸ் நிறுவனத்தின் புரொஜெக்ட் பீக்கன் உற்பத்தி ஆலையில் அந்த எரிபொருள் தயாரிக்கப்படும்.
அத்தகைய புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஆலையிலிருந்து எரிபொருளை வாங்கும் முதல் விமான நிறுவனம் எஸ்ஐஏ ஆகும்.
எஸ்ஐஏ நிறுவனமும் அதன் துணை நிறுவனமான ஸ்கூட்டும் 2030ஆம் ஆண்டுக்குள் தங்களின் மொத்த எரிபொருள் தேவையில் ஐந்து விழுக்காட்டை அத்தகைய எரிபொருளாகப் பயன்படுத்த இலக்கு கொண்டுள்ளன.
முன்னதாக, 2024ஆம் ஆண்டில் நெஸ்டே நிறுவனத்திடமிருந்து 1,000 டன் எரிபொருளை வாங்கப்போவதாக இரு விமான நிறுவனங்களும் கூறியிருந்தன.
