வரும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), ஸ்கூட் விமானங்களில் பயணம் செய்யும்போது கையடக்க மின்னூட்டிகளைக் (power bank) கொண்டு தனிப்பட்ட சாதனங்களுக்கு மின்னூட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமானத்தில் பயணம் செய்யும்போது அதில் உள்ள யுஎஸ்பி துறைகளில் கையடக்க மின்னூட்டிகளைச் சொருகி அவற்றுக்கு மின்னூட்டவும் கூடாது. புதன்கிழமை (மார்ச் 12) ஃபேஸ்புக்கில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இத்தகவல்களை வெளியிட்டது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அது குறிப்பிட்டது.
“லித்தியம் மின்கலன்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் கையடக்க மின்னூட்டிகளுடன் பயணம் செய்வது குறித்த, அனைத்துலக ஆகாயப் போக்குவரத்துச் சங்கத்தின் அபாயகரமான பொருள்கள் விதிமுறைகளுக்கு எஸ்ஐஏ இணங்குகிறது,” என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது.
“அப்படியென்றால் விமானத்தினுள் பயணிகளிடம் இருக்கும் பெட்டிகளில்/பைகளில் மட்டுமே கையடக்க மின்னூட்டிகளை வைத்திருப்பது கட்டாயம்,” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
100 வாட் அவர் (Wh) வரை சக்திகொண்ட கையடக்க மின்னூட்டிகளை வைத்திருக்க பயணிகள் சிறப்பு அனுமதி வாங்கத் தேவையில்லை. அதேநேரம், 100லிருந்து 160 வாட் அவர் வரை சக்திகொண்ட கையடக்க மின்னூட்டிகளைக் கொண்டுசெல்ல பயணம் செய்யும் விமான நிறுவனத்திடமிருந்து அனுமதி பெறவேண்டும்.
இதேபோல், ஸ்கூட்டும் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டது. ஸ்கூட், குறைந்த விலையில் விமானச் சேவைகளை வழங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்சின் பிரிவாகும்.

