சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், அதன் மலிவுக்கட்டண துணை நிறுவனமான ஸ்கூட் ஆகியவற்றின் விமானங்களில் கடந்த டிசம்பர் மாதம் 3.6 மில்லியன் பேர் பயணம் செய்தனர்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) குழுமத்தின் மாதாந்தர சாதனை அது. மேலும், 2023 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் அது 7.1 விழுக்காடு அதிகம்.
அந்தக் குழுமத்தின் மாதாந்தர செயல்பாட்டு அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்று உள்ளன. அந்த அறிக்கை புதன்கிழமை (ஜனவரி 15) மாலை வெளியிடப்பட்டதாக பிஸ்னஸ் டைம்ஸ் கூறியது.
இரு விமான நிறுவனங்களில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் மட்டும் 2024 டிசம்பர் மாதம் 2.4 மில்லியன் பேர் பயணம் செய்தனர். ஓராண்டுடன் ஒப்பிடுகையில் அது 9.6 விழுக்காடு அதிகம்.
2023 டிசம்பரில் அதன் விமானங்களில் பயணம் செய்தோர் எண்ணிக்கை 2.2 மில்லியன்.
அதேபோல, ஸ்கூட் விமானங்களை 2024 டிசம்பர் மாதம் 1.1 மில்லியன் பயணிகள் பயன்படுத்தினர். அது 2023 டிசம்பரைக் காட்டிலும் 2.3 விழுக்காடு அதிகம்.
2024ஆம் ஆண்டு முழுவதும் அந்தக் குழுமத்தின் விமானங்களில் 39 மில்லியன் பேர் பயணம் செய்தனர். 2023ஆம் ஆண்டில் பயணம் செய்த 34.6 மில்லியன் பேரைக் காட்டிலும் அது 12.7 விழுக்காடு அதிகம்.
பயணிகள் நிலவரம் இவ்வாறிருக்க, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழும விமானங்களின் சரக்குப் போக்குவரத்தும் கடந்த ஆண்டு 13.6 விழுக்காடு கூடியது.
தொடர்புடைய செய்திகள்
வழக்கமான ஆண்டிறுதிப் பயணங்களால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் சீனப் புத்தாண்டு காலம் என்பதால் உணவுப் பொருள்களின் போக்குவரத்து கூடியதாகவும் குழுமத்தின் அறிக்கை தெரிவித்தது.
2024 டிசம்பர் மாத நிலவரப்படி, குழுமத்தின் விமானங்கள் 36 நாடுகளையும் வட்டாரங்களையும் சேர்ந்த 129 நகரங்களுக்கு பயணச் சேவையாற்றின. அவற்றில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் மட்டும் 80 நகரங்களுக்கு பறந்து சென்றன.
அதேபோல, 37 நாடுகள் மற்றும் வட்டாரங்களின் 133 நகரங்களுக்கு குழும விமானங்கள் சரக்குகளைச் சுமந்து சென்றதாக அதன் அறிக்கை குறிப்பிட்டது.