அடுத்த ஆண்டு அதன் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடவிருப்பதை முன்னிட்டு, சிறப்பு ஈவுத்தொகை வழங்கப்படுவதற்கான சாத்தியத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் நிராகரிக்கவில்லை என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் போங் தெரிவித்துள்ளார்.
அந்தச் சிறப்பு நிகழ்வை முன்னிட்டுப் பங்குதாரர்களுக்கு வெகுமதி அளிப்பதற்கான சாத்தியத்தைப் பற்றிக் கேட்கப்பட்டபோது அவர் அவ்வாறு கூறினார்.
வியாழக்கிழமை (நவம்பர் 12) நடைபெற்ற நிதிநிலை அறிக்கை வெளியீட்டிற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் புன்னகையுடன் பதிலளித்த அவர், “எஸ்கியூ80 சிறப்பு ஈவுத்தொகை குறித்து, அந்த நேரம் வரும்வரை நாங்கள் என்ன வழங்கப் போகிறோம் என்பதைப் பற்றிப் பேசுவதில்லை.
“எனவே, கூடுதல் ஈவுத்தொகை எதுவாக இருந்தாலும், நாங்கள் வெளியிடும் அறிவிப்புகளுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டும். இதற்கு நிர்வாகக் குழுவினர், பங்குதாரர்கள் ஆகியோரின் ஒப்புதலை நாங்கள் நிச்சயம் பெற வேண்டும்,” என்று கூறினார்.
செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2027ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கு, ஒரு பங்கிற்கு $0.02 இடைக்கால சாதாரண ஈவுத்தொகையையும் ஒரு பங்குக்கு 5 காசு இடைக்கால சிறப்பு ஈவுத்தொகையையும் அந்நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது.
பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஈவுத்தொகை கொள்கையைக் கொண்டிருக்கவேண்டும் என்ற சிங்கப்பூர் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய விதிமுறைக்கு இணங்கிச் செயல்படச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தயாராக உள்ளது என்று தலைமை நிதி அதிகாரி டான் ஜொஆன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
