சிங்கப்பூரின் தேசிய விமான நிறுவனம், தனது நீண்ட விருதுப் பட்டியலில் மேலும் ஒரு விருதைச் சேர்த்துள்ளது. அதுதான் ‘உலகின் சிறந்த விமான நிறுவனம்’ எனும் விருது.
புதன்கிழமையன்று (அக்டோபர் 21) சிங்கப்பூரில் முதன்முறையாக நடைபெற்ற ‘2026 பிஸ்னஸ் டிராவலர் குளோபல் அவார்ட்ஸ்’ நிகழ்வில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) இந்த விருதைப் பெற்றது.
மேலும், இது உலகின் சிறந்த வர்த்தக வகுப்பு, உலகின் சிறந்த விமானப் பணிக்குழுவினர் என்ற பாராட்டுகளையும் பெற்றதுடன், தொடர்ந்து 35வது ஆண்டாக சிறந்த ஆசிய-பசிபிக் விமான நிறுவனம் என்ற சிறப்பையும் பெற்றது.
இந்த விருதுகள் பிஸ்னஸ் டிராவலரின் வாசகர்களால் வாக்களிக்கப்பட்டு அடிக்கடி பயணம் செய்வோர், அனைத்துலகப் பயண நிபுணர் குழுவால் மேற்பார்வையிடப்படுகிறது.
“எங்கள் வாடிக்கையாளர்களின் வலுவான ஆதரவுக்கும் நம்பிக்கைக்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அதேபோல் எஸ்ஐஏ குழுமத்தில் உள்ள எங்கள் திறமையான ஊழியர்களின் அர்ப்பணிப்பு, தொழில்முறைக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்,” என்று எஸ்ஐஏ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் போங் கூறினார்.
“எங்கள் தயாரிப்புகளில், சேவைகளில் தொடர்ந்து முதலீடு செய்வதற்கும், உலகத் தரம் வாய்ந்த முழுமையான பயண வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்கும் எஸ்ஐஏ உறுதிபூண்டுள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.
செப்டம்பர் மாதம் நடைபெற்ற 2026 ஸ்கைட்ராக்ஸ் உலக விமான நிறுவன விருதுகளில், எஸ்ஐஏ உலகின் சிறந்த விமான நிறுவனமாகப் பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து, பிஸ்னஸ் டிராவலரிடமிருந்து இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆறாவது முறையாக இந்த விருதை எஸ்ஐஏ பெறுகிறது.
மேலும், ஸ்கைட்ராக்சிடமிருந்து ஆசியாவின் சிறந்த விமான நிறுவனம், உலகின் சிறந்த எக்கானமி வகுப்பு, உலகின் சிறந்த எக்கானமி வகுப்பு விமான உள்ளக உணவுச் சேவை ஆகியவற்றுக்கான விருதுகளையும் எஸ்ஐஏ பெற்றுள்ளது.
