சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) குறைந்த விலையில் பயணச்சீட்டுகளை வழங்கப்போவதாக அண்மையில் அறிவித்தது. எனினும் அந்நடவடிக்கை குறுகிய காலத்தில் அந்த நிறுவனத்தின் வருவாயை மெருகூட்ட அதிக வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுவதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
எஸ்ஐஏ, இம்மாதம் 24ஆம் தேதி 380,000க்கும் அதிகமான பயணச்சீட்டுகளைக் குறைந்த விலையில் விற்பனைக்கு விட்டது. வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி வரை இந்த விலைக் கழிவு உண்டு.
அவற்றில் 200,000க்கும் மேலான பயணச்சீட்டுகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சேவைகளுக்கானவை. மற்றவை அந்நிறுவனத்தின் குறைந்த விலை விமானச் சேவையான ஸ்கூட்டுக்கானவை.
இந்த முயற்சி மேற்கொள்ளப்படும்போதும் நெருக்குதல்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஏர் இந்தியா விமான எண் 171 விழுந்து நொறுங்கியதால் ஏற்பட்ட சிக்கல்கள், எரிபொருள் அல்லாத அம்சங்களுக்கான செலவு அதிகரித்திருப்பது போன்றவை அதற்கான காரணங்கள் என்றும் கவனிப்பாளர்கள் சொல்கின்றனர்.
நிதி நிலைமை மோசமடையுமா என்பதை ஆராய எஸ்ஐஏயுடன் தொடர்புடைய குறிப்பாக ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்கு விலை ஆராயப்படும் என்றார் மேபேங்க் வங்கி கவனிப்பாளர் எரிக் ஓங்.
அதேவேளை, முன்கூட்டியே பயணச்சீட்டுகளுக்குப் பதிவுசெய்யும் போக்கு வலுவாக இருந்து வருகிறது என்றும் விமானப் பயணங்களுக்கான சவால்களுக்கு மத்தியிலும் திடமாக இருந்து வருவதாகவும் டிபிஎஸ் வங்கி கவனிப்பாளர் டபித்தா ஃபூ குறிப்பிட்டார்.

