வட்ட ரயில் பாதையில் சமிக்ஞை கோளாறு; பயணிகள் பலர் பாதிப்பு

2 mins read
8f6cb381-31ef-4af9-a8e6-8c6c91d63d0d
காலை உச்சவேளையின்போது ரயில் சேவைத் தடை ஏற்பட்டது. - படம்: சாவ்பாவ்

வட்ட ரயில் பாதையில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) காலை உச்சவேளையின்போது சமிக்ஞை கோளாறு காரணமாக மின்தடை ஏற்பட்டு எட்டு எம்ஆர்டி நிலையங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

ரயில் சேவைத் தடை தொடர்பான பதிவுகளை காலை 8.20 மணியிலிருந்து இணையவாசிகள் பதிவேற்றம் செய்யத் தொடங்கினர்.

சிராங்கூன், தாய் செங், கென்ட் ரிஜ், ஒன் நார்த் போன்ற எம்ஆர்டி நிலையங்களில் முடங்கிக் கிடக்கும் ரயிலில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

டோபி காட், சிராங்கூன், புவனா விஸ்டா ஆகிய எம்ஆர்டி நிலையங்களின் தளமேடைகளில் பயணிகள் கூட்டங்கூட்டமாகக் காத்திருப்பதைக் காட்டும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

காலை 8.11 மணிக்கு பாய லேபார் எம்ஆர்டி நிலையத்துக்கும் மேரிமவுண்ட் எம்ஆர்டி நிலையத்துக்கும் இடையிலான ரயில் பாதையில் சமிக்ஞை கோளாறு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக எட்டு எம்ஆர்டி நிலையங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டதாகவும் எஸ்எம்ஆர்டி நிறுவனம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

சமிக்ஞை கோளாறு காரணமாக மின் தடை ஏற்பட்டு ரயில்கள் முடங்கியதாக அது கூறியது.

ஆனால் ஐந்து நிமிடங்களில் மின்சார விநியோகம் சரிசெய்யப்பட்டதாகவும் 8.20 மணிக்கு ரயில்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ரயில்கள் மெதுவாகச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

வட்ட ரயில் பாதை முழுவதும் வழக்கநிலைக்குத் திரும்ப ஏறத்தாழ அரை மணி நேரம் எடுத்ததாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் கூறியது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவ எம்ஆர்டி நிலைய ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட நிலையங்களில் சேவைத் தடை குறித்து அறிவிப்புகள் செய்யப்பட்டன.

பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு எஸ்எம்ஆர்டி மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்