தன்னுரிமைத் தொழிலாளரான 48 வயது புவா கியா ஜோங், தொழிற்சாலை ஒன்றின் கூரையில் தண்ணீர் புகாமல் தடுப்பு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது 9.5 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்து மாண்டார்.
சூரிய ஒளி புகுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கண்ணாடித் தளத்தின் வழியாக, லேசர் ஒளிக்கற்றையைப் பயன்படுத்தி துல்லியமாக வெட்ட உதவும் இயந்திரத்தில் அவர் விழுந்ததாகக் கூறப்பட்டது.
2022ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி நடந்த அந்தச் சம்பவம் துரதிருஷ்டவசமான வேலையிட மரணம் என்று மரண விசாரணை அதிகாரி ஷர்மிளா ஸ்ரீபதி-ஷானாஸ் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
விபத்து நடந்த இடத்தில் குறிப்பிடத்தக்க பாதுகாப்புக் குறைபாடுகள் சில கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஜூ கூன் சர்க்கிள் பகுதியில் அமைந்துள்ள டிரெண்ட் டெக்னாலஜிஸ் சிங்கப்பூர் நிறுவனத்தின் தொழிற்சாலையில் இவ்விபத்து நடந்தது.
திரு புவாவும் அவரது குழுவினரும் வேலைபார்த்த கூரைப்பகுதியில், பாதுகாப்புத் தடுப்புகள் ஏதும் பொருத்தப்பட்டிருக்கவில்லை. கூரையில், எளிதில் உடையக்கூடிய கண்ணாடிப் பரப்பு இருப்பது தொடர்பில் எச்சரிக்கைக் குறிப்பு ஏதும் காணப்படவில்லை என்பதை மரண விசாரணை அதிகாரி சுட்டினார்.
திரு புவாவை வேலைக்கு அமர்த்திய வீணா ஸ்பெஷலிஸ்ட் நிறுவனம் அந்த இடத்தில் ஆபத்தை மதிப்பீடு செய்யும் பணியை மேற்கொண்டிருந்தால் இத்தகைய ஆபத்துகளைக் கண்டறிந்திருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
சம்பவ நாளன்று காலையில் பாதுகாப்பு விதிகள் பற்றிய மேற்பார்வையாளர் சர்க்கார் முகமது இப்ராஹிமின் உரையைக் கேட்ட பிறகு அவருடன் புவாவும் சுபான் முகமது தலாப் எனும் ஊழியரும் கட்டடக் கூரையின் மேல் ஏறினர்.
தொடர்புடைய செய்திகள்
கயிறு, பசை நாடா போன்ற பொருள்களை எடுத்துத் தருமாறு இப்ராஹிம் புவாவிடம் கேட்டார். அவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறிய புவா பின்னர் அங்கிருந்து நகர்ந்தார்.
சிறிது நேரத்தில் பலத்த சத்தம் கேட்கவே எட்டிப் பார்த்த இப்ராஹிம், கண்ணாடித் தளத்தில் ஓட்டை ஏற்பட்டிருப்பதையும் புவா கீழ்த்தளத்தில் அசைவற்றுக் கிடப்பதையும் கண்டார்.
இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட புவா பின்னர் மாண்டதாகக் கூறப்பட்டது.
உயரத்திலிருந்து விழுந்ததை அடுத்து ஏற்பட்ட காயங்களால் அவர் மாண்டதாக மருத்துவர்கள் கூறினர்.
புவா விழுந்ததை யாரும் பார்க்கவில்லை என்றபோதும் அவர் தானே உயிரை மாய்த்துக்கொண்டதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று மரண விசாரணை அதிகாரி கூறினார்.
அந்த இடத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே புவா உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்ததை மனிதவள அமைச்சு கண்டறிந்தது.
சம்பவத்தை அடுத்து, வீணா ஸ்பெஷலிஸ்ட் நிறுவனத்திற்கு சில மாதகாலத்திற்கு முழுமையான வேலைநிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
சம்பந்தப்பட்ட தரப்புகள்மீது அமலாக்க நடவடிக்கை மேற்கொள்வது குறித்து மனிதவள அமைச்சு பரிசீலித்துவருவதாக மரண விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

