சிங்கப்பூரும் மலேசியாவும் வர்த்தகம், முதலீடு தொடர்பான புதிய சிறப்புப் பொருளியல் மண்டலத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் (JS-SEZ) தொடர்பான ஒப்பந்தம் ஜனவரி 7ஆம் தேதி இரு நாட்டுத் தலைவர்களின் 11வது ஓய்வுத்தளச் சந்திப்பில் கையெழுத்தானது.
பிரதமர் லாரன்ஸ் வோங், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் இருவரின் முன்னிலையில் அது கையெழுத்தானது.
ஓய்வுத்தளச் சந்திப்பிற்குப் பின்னர் இடம்பெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் வோங் பேசினார். புதிய சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் மூலம் இரு நாட்டு மக்களுக்கும் புதிய வேலைகளும் கூடுதல் வாய்ப்புகளும் உருவாகும் என்றார் அவர்.
ஒப்பந்தம் குறித்த கலந்துரையாடலின்போது, நீண்டகால அடிப்படையில் இரு நாட்டு வர்த்தக நிறுவனங்களும் சேர்ந்து வளர்ச்சி காண்பதை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை இருதரப்பும் மேற்கொண்டன என்றார் திரு வோங்.
எனவே, ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் குறித்து நம்பிக்கையும் அதை முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆர்வமும் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த மண்டலத்தைக் கூடுதல் போட்டித்தன்மையுடனும் வர்த்தகங்களை ஈர்க்கும் வகையிலும் விளங்கச்செய்ய இரு தரப்புப் பலங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பிரதமர் வோங் கூறினார்.
சிங்கப்பூர் நிறுவனங்கள் ஜோகூருக்குச் செல்வது மட்டுமின்றி, இருதரப்பும் இணைந்து பணியாற்றி உலகளாவிய நிலையில் புதிய முதலீட்டுத் திட்டங்களை ஈர்ப்பது அந்தச் சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் வலிமையாக விளங்கும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
கூட்டாகச் சந்தைப்படுத்துவதன் மூலம் இரு தரப்பும் கூடுதலான உலகளாவிய முதலீடுகளை அந்த மண்டலத்திற்கு ஈர்க்க முடியும் என்று நம்பப்படுவதாகத் திரு வோங் கூறினார்.
இரண்டு நாடுகள் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றுவது மிக அரிது என்று கூறிய மலேசியப் பிரதமர் அன்வார், இந்த முயற்சி தனித்துவமானது என்றார்.
இரு நாடுகளிலும் அரசியல் நிலைத்தன்மை கொண்ட, தெளிவான பொருளியல் கொள்கைகளை உடைய அரசாங்கங்கள் அமைந்துள்ளன என்றார் அவர்.
ஊக்கத்தொகைகளைவிட இத்தகைய அம்சங்களே புதிய பொருளியல் மண்டலத்திற்கு நிறுவனங்களையும் முதலீடுகளையும் ஈர்க்கும் என்றார் திரு அன்வார்.
ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம், 2023ஆம் ஆண்டு அக்டோபரில் சிங்கப்பூரில் நடைபெற்ற 10வது சிங்கப்பூர் - மலேசியத் தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.
11வது ஓய்வுத்தளச் சந்திப்பில், சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தி, நீடித்தநிலைத்தன்மை, மின்சார வர்த்தகம் போன்றவற்றுடன் இருதரப்புக்கு இடையே வெகுநாள்களாக நீடிக்கும் வான்வெளி, தண்ணீர், கடல்துறை எல்லைகள் போன்ற விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இரு பிரதமர்களும் காலாண்டு அடிப்படையில் சிறு சந்திப்புகளை நடத்தி, விவகாரங்களை மறுஆய்வு செய்ய இணங்கியுள்ளதாகத் திரு அன்வார் கூறினார்.